இரண்டு ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்ட 'ஐ12 காத்தோங்' கடைத் தொகுதி நேற்று அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது.
இணைந்து பணியாற்றும் வேலையிடம், தொழில்நுட்பம் சார்ந்த சில்லறைக் கடைகள் போன்ற உத்திகளின் அடிப்படையில் கடைத் தொகுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் ரோடு, ஜூ சியாட் ரோடு சந்திப்பில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இந்த ஆறு மாடி கட்டடம் இடம்பெற்றுள்ளது.
இதில் 150க்கும் மேற்பட்ட சில்லறை, உணவு பானக் கடைகள் செயல்படுகின்றன.
எண்பது விழுக்காடு வாடகைதாரர்கள் புதியவர்கள். கிழக்கு வட்டாரத்தில் அமையும் முதல் கடையான 'லுலுலெமன்' அவற்றில் ஒன்று. நாய்களுக்குப் பராமரிப்பு சேவைகளை வழங்கும் மிஸ்டர் வூல்ப்ஸ் கடையும் இங்கு அமைந்துள்ளது. உணவு, பானக் கடை களான 'டிம் ஹோ வான்', 'ஒயின் கலெக்ஷன்' போன்ற கடைகள் மீண்டும் இங்கு திறக்கப்பட்டு உள்ளன.
புத்தாக்கம் மற்றும் புதிய அம்சங்களின் அடிப்படையில் முழுமையாகத் தானாக இயங்கும் பிஸ்ட்ரோ பைட்ஸ் எனும் கடையும் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது.
'பிட்ஸா எக்ஸ்பிரஸ்', 'மை டம்போபோ', 'த பாஸ்டா புரோஜெக்ட்' போன்ற கடைகளில் மத்திய சமையல் கூடத்தில் தயாரிக்கப்பட்ட உணவு விநியோகிக்கப்படுகிறது.
'பிஸ்ட்டோ பைட்ஸ்' கடையை கடைத்தொகுதியின் உரிமையாள ரான கெப்பல் லேண்ட் அமைத்து உள்ளது.
வாடகைதாரர்களுக்கு அதிக உற்பத்தித்திறனையும் அதிக விற்பனை வாய்ப்பையும் தொழில்நுட்பம் வழங்கியிருக்கிறது என்று அந்நிறு வனம் நேற்று வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.

