சாங்கி விமான நிலையத்திலிருந்து டாக்சி ஏறும் பயணிகளுக்கு கட்டண உயர்வு பொருந்தும்
சாங்கி விமான நிலையத்தில் இருந்து டாக்சிகளில் ஏறும் பயணிகள் செலுத்தும் $3 கூடுதல் கட்டண உயர்வு, ஆண்டிறுதி வரை நடப்பில் இருக்கும். அதாவது, இக்கட்டண உயர்வு ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 19ஆம் தேதி நடப்புக்கு வந்த இந்தக் கூடுதல் கட்டணம், ஜூன் 30ஆம் தேதி முடிவடைய இருந்தது. சாங்கி விமான நிலையத்திற்கு டாக்சிகளின் வரத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இப்போது இந்தக் கூடுதல் கட்டணம் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்படுவதாக எஸ்எம்ஆர்டியின் துணை நிறுவனமான ஸ்ட்ரைட்ஸ் டாக்சி நேற்று அதன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
இங்கிருந்து தொடங்கும் டாக்சி பயணங்களுக்கு தினமும் மாலை 5 மணியில் இருந்து இரவு 11.59 மணி வரை டாக்சி பயணங்களுக்கு கூடுதலாக $8 செலுத்த வேண்டியிருக்கும். மற்ற நேரங்களில் இக்கூடுதல் கட்டணம் $6ஆக இருக்கும்.
கூடுதல் கட்டண உயர்வு நடப்புக்கு வருவதற்கு முன்பு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணியிலிருந்து இரவு 11.59 மணி வரை கூடுதல் கட்டணம் $5 ஆகவும் மற்ற நேரங்களில் இது $3 ஆகவும் இருந்தது.
கம்ஃபர்ட்டெல்குரோ, பிரைம் டாக்சி, பிரிமியர் டாக்சி ஆகிய நிறுவனங்களும் இந்தக் கூடுதல் கட்டண அதிகரிப்பு நீட்டிக்கப்படுவதாக நேற்று தெரிவித்தன.
சாங்கி விமான நிலையம், சாங்கி விமான சரக்கு மையம், விமான நிலைய காவல் நிலையம், சிங்கப்பூர் விமான நிலைய தளவாடப் பூங்கா ஆகிய இடங்களில் இருந்து தொடங்கும் டாக்சி பயணங்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தும்.
பயணிகளை அழைப்பதற்காக விமான நிலையத்திற்குச் செல்ல டாக்சி ஓட்டுநர்கள் தயங்கியதால் கூடுதல் டாக்சி கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. கூடுதல் கட்டண உயர்வு நடப்புக்கு வருவதற்கு முன்பு விமான நிலையங்களில் டாக்சிகளுக்காக பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.
கூடுதல் கட்டணம் அதிகரிக்கப்பட்ட பிறகு, விமான நிலையத்திற்கு வரும் டாக்சிகளின் எண்ணிக்கை கூடியது. என்றாலும், பெட்ரோல் விலை அதிகரிப்பை இது ஈடுசெய்யவில்லை என்று டாக்சி ஓட்டுநர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியிருந்தனர். மேலும், பயணிகளுக்காக ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்ததாகவும் அவர்கள் சொல்லி இருந்தனர்.
இந்நிலையில், சாங்கி விமான நிலையத்தில் நிலவரத்தைக் கண்டறிய ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு நேற்றுக் காலை முனையம் 3க்கு சென்றது.
வருகையாளர் கூடத்திற்கு வெளியே ஏறக்குறைய 30 டாக்சிகள் வரிசையில் நின்றன. பயணிகள் உடனுக்குடன் டாக்சிகளில் ஏற முடிந்தது.
கூடுதல் டாக்சி கட்டண உயர்வு நீட்டிக்கப்படுவது குறித்து அங்கிருந்த டாக்சி ஓட்டுநர்களுக்குத் தெரியவில்லை. எனினும், இதை தாங்கள் வரவேற்பதாக அவர்கள் கூறினர்.

