சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டதைவிட கடந்த மே மாதம் நன்றாக இருந்தது.
தரவு மையங்கள், 5ஜி சந்தைகளிடம் இருந்து பகுதி மின்கடத்திகளுக்கான தேவை அதிகரித்து இருப்பது இதற்குக் காரணம்.
தொழிற்சாலை உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 13.8 விழுக்காடு உயர்ந்ததாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட தகவல் தெரிவித்தது.
புளூம்பெர்க் கருத்தாய்வு ஒன்றில் பகுப்பாய்வாளர்களின் 5.5 விழுக்காடு வளர்ச்சி கணிப்பையும் மே மாத தொழிற்சாலை உற்பத்தி விஞ்சியது. தொழிற்சாலை உற்பத்தி தொடர்ந்து எட்டு மாதங்களாக அதிகரித்து வந்துள்ளது.
கடந்த மாதம் வீழ்ச்சிகண்ட உயிர்மருத்துவ உற்பத்தியைச் சேர்க்காமல் பார்த்தால், உற்பத்தி மேலும் அதிகமாக 18 விழுக்காடு அதிகரித்தது.
உலகம் முழுவதும் கொவிட்-19 பெருந்தொற்றில் இருந்து ஏற்பட்டு வரும் பொருளியல் மீட்சி, குறிப்பாக பகுதி மின்கடத்திகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது.
எனினும், உலகம் முழுவதும் தொழிற்சாலை உற்பத்தி மெதுவடைந்து வருவதை அண்மைய தரவு கோடி காட்டுகிறது.
சீனாவில் நடப்பில் உள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளும் உக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பும் விநியோகத் தொடர்புகளுக்கு இடையூறு விளைவித்து, பணவீக்கத்தை உயர்த்தியுள்ளன.
அமெரிக்காவில் பொருளியல் மந்தநிலை, சீனாவில் பொருளியல் மெதுவடைதல் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாலும், உற்பத்தித் தேவை குறைய வாய்ப்புள்ளது.
சிங்கப்பூரில் மின்னணுவியல் துறை உற்பத்தி ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 33.6 விழுக்காடு ஏற்றம் கண்டது.
ஒப்புநோக்க, ஏப்ரலில் இந்த உயர்வு 10.4 விழுக்காடாக இருந்தது.
பகுதி மின்கடத்திப் பிரிவு 45.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது. ஏப்ரலில் இப்பிரிவு 12.9 விழுக்காடு ஏற்றம் கண்டது.
போக்குவரத்துப் பொறியியல் துறை கடந்த மாதம் 12.9 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது. வான்வெளித் துறை 27.2 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்தது.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து விமானப் பாகங்களின் உற்பத்தி அதிகரித்ததோடு பராமரிப்பு, பழுதுபார்ப்புப் பணிகளும் கூடின.
கடல்துறை, கரை தாண்டிய பொறியியல் பிரிவு 8.2 விழுக்காடு அதிகரித்தது.
ஒட்டுமொத்தமாக, இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் போக்குவரத்துப் பொறியியல் துறை 14.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
துல்லியப் பொறியியல் துறை 3.2 விழுக்காடு கூடியது.

