ருவாண்டா தலைநகர் கிகாலியில் நேற்று நடைபெற்ற காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்களின் சந்திப்பின் தொடக்க விழாவில் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் இந்தச் சந்திப்பின் தொடக்கத்தை இந்த விழா குறிக்கிறது.
பொதுவாக ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த இந்தச் சந்திப்பு, கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக 2018ல் லண்டனில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
நேற்று முன்தினம் காலை ருவாண்டாவைச் சென்று அடைந்த பிரதமர் லீ, ருவாண்டா அதிபர் பால் ககாமி அன்று மாலை நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நகர மையப் பகுதியில் நேற்று முன்தினம் கார்களற்ற பகுதியில் தாம் உல்லாசமாக நடந்து சென்று வந்ததாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்புக்கு இடையே இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை பிரதமர் லீ நேற்று சந்தித்தார்.
இரு தலைவர்களும் வட்டார, அனைத்துலக நிலவரம் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக பிரதமர் லீயின் ஊடகச் செயலாளர் சாங் லி லின் கூறினார்.
தென்கிழக்காசியா உடனான ஈடுபாட்டை இந்தியா எவ்வாறு அதிகரிக்கலாம், சிங்கப்பூரும் இந்தியாவும் எந்தெந்த அம்சங்களில் ஒத்துழைக்கலாம் என்பது குறித்தும் இரு தலைவர்கள் கலந்து ஆலோசித்தனர்.

