'டீம்பில்ட் கன்ஸ்ட்ரக்ஷன் குருப்' நிறுவனத்தின் ஆலையில், முன்வடிவமைக்கப்பட்ட கட்டடப் பிரிவுகள் தனித்தனி பகுதிகளில் நேர்த்தியாக அடுக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனத்தின் ஆலையில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.
ஆனால், அடுக்கிவைக்கப்பட்ட இந்தப் பொருள்களுக்கு அருகே ஒருவரைக்கூட காணவில்லை. ஏனெனில், அதன் தானியக்க முறை அனைத்து வேலைகளையும் செய்துவிடுகிறது.
எனவே, ஊழியர்கள் உயரத்திலிருந்து வேலை செய்யவோ கட்டடப் பிரிவுகளை நகர்த்தவோ வேண்டியதில்லை. இதனால், அவர்கள் கீழே விழுவதற்கான அல்லது காயம் அடைவதற்கான அபாயம் குறைவாக உள்ளது.
சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் அதன் வருடாந்திர சுகாதார, பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, டெஃபு சௌத் ஸ்திரீட்டில் உள்ள டீம்பில்ட் நிறுவனத்தின் வேலையிடத்துக்கு நேற்று சென்றது.
வேலையிடத்தில் உற்பத்தித்திறனையும் பாதுகாப்பையும் மேம்படுத்த தான் பயன்படுத்தும் புத்தாக்க முறையை டீம்பில்ட் நிறுவனம் காண்பித்தது.
கட்டடப் பிரிவுகள் கட்டுமானத் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, முன்வடிவமைக்கப்பட்ட கட்டடப் பிரிவுகளைத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதில் டீம்பில்ட் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
இத்தகைய தொழில்நுட்பத் தீர்வுகள் ஊழியர்களைப் பாதுகாத்தாலும், அவற்றில் முதலீடு செய்ய சில நிறுவனங்களிடம் போதுமான நிதி வசதி இருக்காது என்று சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்க உறுப்பினர் டேவிட் லியோங் ஒப்புக்கொண்டார்.
"கட்டடப் பிரிவுகளை முன்வடிவமைப்பதன் மூலம் உயரத்திலிருந்து வேலை செய்வதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து நிறுவனங்கள் ஆராயலாம்," என்று அவர் சொன்னார்.

