மோனலிசா
வரும் 2026ஆம் ஆண்டுக்குள் 6,500 தொண்டூழிய வாய்ப்புகளை உருவாக்கவுள்ளதாக தேசிய நூலக வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் ஏறத்தாழ 2,000 தொண்டூழியர்கள் காணொளி வாயிலாகக் கதை சொல்லுதல், கொவிட்- 19 நிகழ்வுகளை சித்திரித்தல், ஒளிப்பதிவு, 'கோடிங்' எனப்படும் குறியீட்டு முறையை உருவாக்குதல், தொழில் வளர்ச்சி பற்றிய பயிலரங்குகள் போன்ற வெவ்வேறு முயற்சிகள் மூலம் தொண்டு செய்துள்ளனர். புதிதாக வரவிருக்கும் பொங்கோல் வட்டார நூலகத்தையும் கணக்கில்கொண்டு இவர்களின் எண்ணிக்கையை உயர்த்த நூலக வாரியம் திட்டமிடுகிறது.
நேற்று சாங்கி விமான நிலையத்தில் நடைபெற்ற தொண்டூழியர்களுக்கான பாராட்டு விழாவில் இதுகுறித்து பேசினார் தேசிய நூலக வாரியத் தலைவர் லீ சியோ ஹியாங்.
"கொவிட்-19 நோய்த்தொற்று காலத்திலும் மின்னிலக்க வாய்ப்புகளைப் பயன்படுத்தி தொண்டூழியர்கள் உத்வேகத்துடனும் நேர்த்தியுடனும் தொண்டூழியம் செய்து வந்தது பாராட்டத்தக்கது. தொடர்ந்து அவர்கள் 'எல்ஏபி 25' திட்டத்தின் வாயிலாகத் தங்களது நேரத்தையும் புத்தாக்கச் சிந்தனைகளையும் வாசிப்பு மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கும் வழிமுறைகளையும் செயல்படுத்தி அனைத்து சிங்கப்பூரர்களும் பயன்பெறும் வகையில் பங்களிக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
காணொளிவழி பிள்ளைகளுக்குக் கதை சொல்லி வருகிறார் தேசிய நூலக வாரியத்தின் தொண்டூழியரான 32 வயது ராஜலெட்சுமி கண்ணப்பன் (படம்).
"எங்கள் பிள்ளைகள் தாய்மொழியை நாளடைவில் மறந்துவிடுவார்களோ என்ற பயம் எனக்கும் என் கணவருக்கும் ஏற்பட்டது. அதன் விளைவாக, கொவிட்-19 காலத்தில் காணொளி வாயிலாகக் கதை சொல்லும் இந்தப் புதிய முயற்சியைக் குடும்பமாக நாங்கள் செய்யத் தொடங்கினோம்.
"பிள்ளைகளுக்கான நீதிநெறிகள், நற்பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை மையப்படுத்தும் கதைகளின் கதாபாத்திரங்களாக நாங்களே நடித்து, பின்னணிக் குரலும் கொடுத்தோம். இதன் மூலம் என் பிள்ளைகள் நிறைய புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொண்டார்கள்," என்று ராஜலட்சுமி கூறினார்.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயான இவர், முடிந்தவரை தற்போது குடும்பத்தில் அனைவரும் தமிழில் பேசுவதாகக் கூறினார்.
தேசிய நூலக வாரியத்தின் இணையப் பக்கத்தில் இடம்பெறும் இக்காணொளிகள் பயனுள்ளதாக இருப்பதாகப் பெற்றோர் பலரும் தன்னிடம் கூறியது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
தொண்டூழியர் எண்ணிக்கையை மும்மடங்கு உயர்த்தத் திட்டமிடும் தேசிய நூலக வாரியம்

