மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின்போது ஒன்பது மாத ஆண் குழந்தைக்கு அருகில் 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்திய மாதைக் கண்டுபிடித்தனர்.
மாது இந்தக் குழந்தையின் தாயார் என்றும் ஒற்றைப் பெற்றோராக அவர் குழந்தையைப் பராமரிப்பதாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று 'ஃபேஸ்புக்'கில் பதிவிட்டது.
வீடு மிகவும் அசுத்தமாக இருந்ததாகவும் போதைப்பொருள்கள் வெளிப்படையாகக் காணப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் இத்தகைய காட்சிகள் மிக அரிதானவை என்றாலும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் தாங்களே தங்கள் வாழ்வை அழித்துக்கொள்வதை இது காட்டுவதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை காவல் நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் தாயார் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு போதைப்பொருள் பயன்படுத்துவோர் கைதுசெய்யப்பட்ட சம்பவங்கள் அதற்கு முந்தைய ஆண்டைவிடக் குறைவாகப் பதிவாயின. கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளும் இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறினர்.
கைது செய்யப்பட்டோரில் ஏறத்தாழ 34 விழுக்காட்டினர் புதிதாக போதைப்பொருள் பயன்படுத்தத் தொடங்கியோர்.
சிங்கப்பூரை போதைப்பொருள் புழக்கமற்ற நாடாக வைத்திருப்பது தொடர்பில் தொடர்ந்து பணியாற்றுவதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.

