செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5f749774-6768-4f0f-ac0f-d3280caa3e65
-

ஈசூன் கத்திக்குத்து தொடர்பில் சந்தேக நபர் கைது

ஈசூன் ஸ்ட்ரீட் 51ல் அமைந்திருக்கும் புளோக் '510ஏ'ல் இருவரைக் கத்தியால் குத்தியதாக 58 வயது ஆடவர்மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவத்தில் 62 வயது ஆடவரும் 41 வயதுப் பெண்ணும் காயமடைந்தனர்.

முன்விரோதம் காரணமாக மூண்ட சண்டையில் வேண்டுமென்றே அபாயகரமான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியதற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்தது. காயமடைந்த இருவரும் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

நம்பிக்கை மோசடி செய்ததாக ஆடவர்கள்மீது குற்றச்சாட்டு

காசோலை வாங்கத் தரப்பட்ட பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஆடவர்கள் இருவர்மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் ஒருவருக்கு வயது 37; மற்றவருக்கு 45.

நாணய மாற்று வணிகர் ஒருவர் 2019ஆம் ஆண்டு காசோலை வாங்கும்படி 5.6 மில்லியன் வெள்ளியை 45 வயது ஆடவரிடம் தந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் ஆடவர்கள் அந்தப் பணத்திலிருந்து ஆளுக்கு 600,000 வெள்ளியைத் தங்களுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனத்திற்குப் பயன்படுத்திக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாணவனை மானபங்கப்படுத்திய ஆடவருக்குச் சிறை

உயர்நிலைப் பள்ளி ஆய்வுக்கூடத்தில் வேலைபார்த்த

33 வயது ஆடவருக்கு அப்பள்ளியின் 13 வயது மாணவனை மானபங்கப்படுத்தியதற்காக 10 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் பிடிபட்டதாகக் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவனின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு ஆடவரின் பெயரையோ பள்ளியின் பெயரையோ வெளியிட அனுமதி இல்லை.