பிரதமர் லீ: சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறையைக் கையாள ஏற்கெனவே திட்டமிட்டது

பிரதமர் லீ: சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறையைக் கையாள ஏற்கெனவே திட்டமிட்டது

1 mins read
8dc82211-a363-4afa-ba9b-df27c46857fa
கேலாங் சிராய் ஈரச்சந்தையில் உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சி. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உலக நாடுகள் தற்போது உணவு ஏற்றுமதியைத் தடைசெய்து வருவது கவலை தந்தாலும் அதில் ஆச்சரியம் இல்லை என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

உக்ரேன் போரால் நிலவும் உணவுத் தட்டுப்பாடும் விலை உயர்வும் பின்விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக திரு லீ குறிப்பிட்டார்.

இறக்குமதியாகும் உணவை அதிகம் சார்ந்திருக்கும் சிங்கப்பூருக்கு இது ஒரு சவால் என்பதை அவர் சுட்டினார்.

ஆனால், கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்தே இந்தப் பிரச்சினை எழும் என்று சிங்கப்பூர் எதிர்பார்த்ததாக ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் பங்கேற்ற சந்திப்பிற்குப் பிறகு சிங்கப்பூரைச் சேர்ந்த செய்தியாளர்களிடம் பேசியபோது பிரதமர் லீ சொன்னார்.

அந்த காலகட்டத்தில் கோழி, முட்டை, காய்கறி உள்ளிட்டவற்றின் இறக்குமதியில் இடையூறு வருவது குறித்து அரசாங்கம் கவலை கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

"அப்போதே நாங்கள் கையிருப்புகளை அதிகரித்து கூடுதலான பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்துவிட்டோம்," என்று திரு லீ கூறினார்.

சிங்கப்பூர் அதன் 90 விழுக்காட்டு உணவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.

அதனால்தான் பிரேசில், உக்ரேன், போலந்து ஆகிய நாடுகளிலிருந்து கோழிகள், முட்டைகள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுவதாக திரு லீ குறிப்பிட்டார்.

இதேபோல் மற்ற பகுதிகளிலிருந்து காய்கறியைத் தருவிக்கும் முயற்சியிலும் சிங்கப்பூர் தற்போது இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.