சிங்கப்பூரில் கடந்த ஈராண்டில் வீடுகளுக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில் வீடு வாங்க விண்ணப்பம் செய்வோர் புதிய வீட்டைப் பதிவுசெய்ய அழைக்கப்படும்போது அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியிருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 'பிடிஓ' எனப்படும் தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளைப் பதிவுசெய்ய அளிக்கப்பட்ட வாய்ப்பை ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் நிராகரித்ததாக அது குறிப்பிட்டது. வீடு வாங்குவதில் தீவிரமாக இருந்தோருக்கு வீடு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்க இது வகைசெய்தது.
'பிடிஓ' வீடுகளையோ எஞ்சிய வீடுகளுக்கான விற்பனையில் அறிவிக்கப்படும் வீடுகளையோ பதிவுசெய்ய மறுக்கும் விண்ணப்பதாரர்கள், இதற்கு முன்னர் வாய்ப்பு கிடைக்காததால் வழங்கப்பட்ட சலுகைப் புள்ளிகளை இழப்பர் என்று கழகம் தெரிவித்தது.
சில புகழ்பெற்ற 'பிடிஓ' திட்டங்களில் ஒரு நான்கறை வீட்டுக்கு 16 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். ஆனால் 2020, 2021ஆம் ஆண்டுகளில் மூன்றரை அல்லது அதைவிடப் பெரிய வீடுகளுக்கு விண்ணப்பிப்போர் விகிதம் 1.7 மட்டுமே.
முதிர்ச்சியடைந்த பேட்டைகள், முதிர்ச்சியடையாத பேட்டைகள் இரண்டிலும் இதனால் முதல்முறை வீடு வாங்க விண்ணப்பம் செய்வோர், தாங்கள் விரும்பியபடியே வீட்டுக்குப் பதிவுசெய்ய சிறந்த வாய்ப்பு இருப்பதாக வீவக கூறியது.
கிட்டத்தட்ட 19 'பிடிஓ' திட்டங்களில் நிலைமை இவ்வாறு இருப்பதாகக் கூறிய கழகம், இவற்றில் ஏழு திட்டங்களில் காத்திருக்கும் நேரம் மூன்று ஆண்டுக்கும் குறைவு என்று குறிப்பிட்டது.
முதல்முறை வீடு வாங்குவோர், முதிர்ச்சியடையாத பேட்டைகளில் 'பிடிஓ' திட்டத்துக்கு விண்ணப்பித்து இரண்டு அல்லது அதற்கும் மேலான முறை வெற்றிபெறாவிட்டால், அடுத்த விண்ணப்பத்தில் அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு தரப்படும் என்று கூறப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி மூன்று முயற்சிகளுக்குள் இவர்கள் வீட்டைப் பதிவுசெய்ய முடிவதாகத் தெரியவந்துள்ளது.
வீட்டு வாசல் அமைந்திருக்கும் திசை குறித்த நம்பிக்கை, கீழ் மாடியில் அமைந்திருப்பது, அருகில் உணவுக் கடைகள் இல்லாதது, ரயில் நிலையத்திற்குத் தொலைவில் இருப்பது போன்ற காரணங்களால் பதிவுசெய்ய விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்க நேரிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய விண்ணப்பதாரர்கள் சிலர் கூறினர்.
பொது வீடமைப்பு கட்டுப்படியான விலையிலும் எளிதில் அணுகக்கூடிய இடங்களிலும் அமைந்திருப்பதை தொடர்ந்து உறுதிசெய்ய வீவக கடப்பாடு தெரிவித்துள்ளது.
வீவக 'பிடிஓ' வீடுகளைப் பதிவுசெய்ய அழைக்கப்பட்ட 40% அதனை நிராகரித்தனர்

