குடிமைத் தற்காப்பு அதிகாரிகளின் நலனைக் கண்காணிக்கும் 'எக்ஸெல்'
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் அனைவரும் தங்கள் உடல்நலம், மனநலம் தொடர்பான மருத்துவச் சோதனைத் தரவுகளைத் தெரிந்துகொள்ள இயலும். பயிற்சியின்போது இவர்கள் எந்தெந்த அம்சங்களில் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அடையாளம்காண இது உதவும்.
'எக்ஸெல்' எனப்படும் நெருக்கடி நேரப் பணியாளரின் உடலுறுதிப் பயிற்சி, மேம்பாட்டு ஆய்வுக்கூடம் இந்தத் தரவுகளைச் சேகரிக்க வகைசெய்கிறது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும், 'எச்டிஎக்ஸ்' எனப்படும் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து உருவாக்கிய இந்த ஆய்வுக்கூடம் இம்மாதம் 10ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் இருந்து ஏறக்குறைய 500 புதிய அதிகாரிகளின் தரவுகள் இதில் சேகரிக்கப்பட்டுள்ளன.
வெகுவாகக் குறையும் சிறுநீரக மாற்று
அறுவைச் சிகிச்சை எண்ணிக்கை
சிங்கப்பூரில் கடந்த ஈராண்டில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. சிறுநீரகத்தைத் தானமாகப் பெறக் காத்திருக்கும் காலம் மிகவும் அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டது.
2019ல் உயிர்நீத்தோரிடம் இருந்து தானமாகப் பெற்ற சிறுநீரகத்தை நோயாளிக்குப் பொருத்தும் 33 அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன. 2020, 2021ல் இந்த எண்ணிக்கை முறையே 15, 24ஆகக் குறைந்தது. உயிருடன் இருப்போர் தானமாக வழங்கும் சிறுநீரகத்தைப் பொருத்தும் அறுவைச் சிகிச்சைகளின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 56ஆகப் பதிவானது. 2020ல் 31க்குச் சரிந்த இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு 47க்கு உயர்ந்தது. உயிர்நீத்த ஒருவரிடமிருந்து சிறுநீரகத்தைப் பெறுவதற்கு கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

