கொவிட்-19 கிருமிப்பரவலின்போது வேலையிடம் குறித்த அதிருப்தியால் பணியிலிருந்து விலகியோர் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் இவர்களில் சிலர் திட்டமிட்டதைவிட அதிக நாள் வேலைபார்த்த பிறகே பணியிலிருந்து ஓய்வுபெற இயலும் என்ற நிலை ஏற்பட்டிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
'புருடென்ஷியல் சிங்கப்பூர்' காப்பீட்டு நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
கிருமிப்பரவல் காலகட்டத்தில் வேலையிலிருந்து விலகியோர் அல்லது விலகத் திட்டமிட்ட ஏறக்குறைய ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஆய்வில் 25 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டோர் பங்கேற்றனர்.
இவர்களில் ஐந்தில் ஒருவர், சராசரியாக தங்கள் ஓய்வுபெறும் வயதை ஆறு ஆண்டு தள்ளிப்போட வேண்டியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. புதிதாக வேறோர் துறையில் வேலையில் சேருவதற்கு சம்பளக் குறைப்பை இவர்கள் ஏற்றுக்கொண்டது இதற்கு முக்கியக் காரணம்.
இருந்தாலும் சம்பளம் குறைகிறது என்பதைவிடச் சிலருக்கு வேலை மாற்றத்தால் கிட்டும் மனத் திருப்தி கூடுதலாக ஆறு ஆண்டுகளுக்கு உழைப்பதற்கான உத்வேகத்தைத் தரும் என்று சிலர் கூறுகின்றனர்.
கூடுதலான நீக்குப்போக்கு, பொருத்தமான வேலை-வாழ்க்கைச் சமநிலை ஆகியவற்றை முன்னிட்டுப் பலரும் குறைவான ஊதியத்திற்கு ஒப்புக்கொள்வதும் ஆய்வில் தெரியவந்தது.
ஆனால் பணியிடை மாற்றத்துக்கு முயற்சி செய்யும் அனைவருக்குமே அதிர்ஷ்டவசமாகப் பொருத்தமான வேலை கிடைத்துவிடுவதில்லை. சிலர் மூன்று அல்லது நான்கு முயற்சிகளுக்குப் பிறகே நல்லதொரு புதிய வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.
சரியான ஓய்வுகாலத் திட்டமிடல் இல்லாதோர் வேலை மாற்றத்தால் கசப்பான விளைவுகளையே சந்திக்க நேரிடும் என்பதால் முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

