மோனலிசா
பிள்ளைகளின் எதிர்காலத்தை மின்பந்தயம் கெடுத்துவிடும் என்று பயப்படும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சமூகத்திற்கும் அதுகுறித்த கவலை தேவையற்றது என்பதை காட்டும் நல்ல உதாரணமாக இருக்க விரும்புகிறார் மின்பந்தயத் துறையில் இரட்டை உபகாரச் சம்பளத்தைப் பெற்ற
ஆர். முகம்மது அலீஃப், 23.
மின்பந்தய துறையின் மாணவ விளையாட்டு வீரர்களை ஊக்கு விக்கும் வண்ணம், முதல்முறையாக ரஹால் லெட்டர்மேன் பந்தய அணியின் ரஹால் லெட்டர்மேன் லணிகன் பந்தய உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. அதை அலீஃப் பெற்றார். அத்துடன் பால் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் பிஎஸ்யு உபகாரச் சம்பளமும் அவருக்குக் கிடைத்துள்ளது.
இந்த உபகாரச் சம்பளத்தைப் பெற்ற முதல் சிங்கப்பூரர் எனும் பெருமை அலீஃபைச் சேரும். எஃப்1 கார் பந்தய ஓட்டுநராவதே இவரது இலட்சியம்.
நான்கு வயதிலிருந்தே 'பிளே ஸ்டேசன்' என்னும் மின்வழி விளையாட்டுகளில் அதீத ஆர்வமும் ஆசையும் கொண்ட இவர் கடந்த 13 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு மெய்நிகர் கார் பந்தயங்களில் 'டீம் ஃபிளாஷ்' என்னும் அணியைப் பிரதிநிதித்து விளையாடி பல வெற்றிகளைக் குவித்துள்ளார்.
"பெரும்பாலான பெற்றோரைப் போல் இல்லாது என்னுடைய பெற்றோர் என் கனவிற்குத் துணை நின்றனர்.
"மின்பந்தயம் என்றாலே அது மாணவர்களின் கல்விசார் வளர்ச்சியைப் பாதிக்கும் என அவர்கள் கருதவில்லை. அதே சமயம் நான் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று கண்டிப்புடன் இருந்த அவர்களின் ஒத்துழைப்பும் அக்
கறையுமே என்னுடைய வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
"படிப்பிலும் கவனம் குறையாமல், பிற துறைகளைப் போல மின்பந்தயத் துறையிலும் வளர்ச்சி கண்டு வெற்றி காண முடியும்," என்று மிகுந்த முனைப்புடன் அலீஃப் தெரிவித்தார்.
தெமாசெக் பல்துறைத் தொழிற்கல்லூரியில் இயந்திர மின்னணுவியல் பட்டயக் கல்வி பயின்ற அலீஃப், இந்த உபகாரச் சம்பளத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள பால் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு வணிகப் பகுப்பாய்வு இளங்கலை பட்டக் கல்வி பயில திட்டமிட்டுள்ளார்.
அந்த நான்கு ஆண்டுகளில் பால் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்து மெய்நிகர் கார்
பந்தயங்களில் அலீஃப் களமிறங்க இருக்கிறார். மேலும் பால் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் அதிநவீன மின்பந்தய மையத்தில் பயிற்சி செய்யும் வாய்ப்பை அவர்
பெற்றுள்ளார்.
"அலீஃபிற்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு மின்பந்தயத்தில் ஆர்வம் கொண்ட பல சிங்கப்பூர் சிறுவர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும். விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் மின்பந்தயத் துறையில் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்" என்று 'டீம் ஃபிளாஷ்' அணியின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சியூ மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

