ஹர்ஷிதா பாலாஜி
சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு தரத்தை உயர்த்த பொதுமக்கள் தங்கள் பங்கை ஆற்றுவதற்கு தொடர்பு தகவல் அமைச்சு எஸ்ஜி கூட்டு மொழிபெயர்ப்பு (எஸ்ஜிடிடி/SGTT) எனும் இணையத்தளத்தை நேற்று அறிமுகப்படுத்தியது.
மொழிபெயர்ப்பு நிபுணர்களுடன், 'எஸ்ஜிடிடி' இணையத்தளத்தில் வழங்கப்படும் மொழிபெயர்ப்பு வசதி யின் துல்லியத்தை மேம்படுத்த பொதுமக்களும் தங்கள்
'சிங்பாஸுடன்' இணையத்தளத்தில் 'சிட்டிசன்' (குடிமக்கள்) மொழிப்பெயர்ப்பாளர்களாக பதிவு செய்து அவர்களுக்கு தெரிந்த வார்த்தைகளுக்கான சரியான மொழிபெயர்ப்புகளை வழங்கலாம்.
ஆங்கிலத்துக்கும் சீனம், மலாய், தமிழ் ஆகிய அதிகாரத்துவ மொழிகளுக்கும் இடையிலான இருவழி மொழிபெயர்ப்பு வசதியோடு, மொழிபெயர்ப்பு தொடர்பான தகவல்களையும் இந்த இணையத்
தளத்தின்வழி பொதுமக்கள் பெறலாம்.
அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தொடர்பு தகவல் மூத்த துணை
அமைச்சரும் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் தலைவருமான திரு டான் கியட் ஹாவ் பல்லின சமுதாயமாக விளங்கும் சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு ஆற்றும் இன்றியமையா பணி குறித்து உரையாற்றினார்.
"மொழிபெயர்ப்பின் அவசியத்தை நாம் அனைவரும் கொவிட்-19 கிருமித்தொற்று காலகட்டத்தில் உணர்ந்தோம்: பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள், தடுப்பூசித் திட்டங்கள் போன்ற தகவல்களை விரைவாக பொதுமக்களிடத்தில், குறிப்பாக மூத்த தலைமுறையினரிடத்தில், சென்று சேர்க்க உதவும் முக்கிய கருவி மொழிபெயர்ப்பாகும். அவ்வாறிருக்க, அதற்குரிய வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும்," என்றார் திரு டான்.
இணையத்தளத்தின் ஆரம்பகட்ட சோதனை காலத்தில் அதன் வசதிகளை மேம்படுத்த உதவிய 'எஸ்ஜிடிடி நண்பர்கள்' கல்வியாளர் லோ மியாவ் சியாங், முன்னாள் 'பெரித்தா ஹரியான்' நிருபர் திரு ஸுல்கிஃப்லி ரஹ்மத், ஊடகத்துறை நிபுணர் திரு த. சரவணன், மொழிபெயர்ப்பு ஆர்வலர்கள் திரு டான் மெங் ஹாவ், அயிஷா லியானா ஆகிய ஐவரின் பங்களிப்பையும் திரு டான் பாராட்டினார்.
கடந்த மூன்றாண்டுகளாக மொழிபெயர்ப்பு துறையில் பணியாற்றி வரும் 49 வயது திரு சரவணன் மொழி ஆர்வலர்கள், மொழி சார்ந்த துறைகளில் பணியாற்று
பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு இவ்விணையத்தளம் பெரிதும் உதவும் என்றார்.
"இக்கருவியைப் பயன்படுத்த பயன்படுத்த, அது வழங்கக்கூடிய தகவல்களின் துல்லியம் மேம்படும். மொழிபெயர்ப்பு நிபுணர்களும் 'சிட்டிசன்' மொழிபெயர்ப்பாளர்களும் தங்களுக்கு தெரிந்தவற்றை தொடர்ந்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யும்போதும் தவறான மொழிபெயர்ப்புகளை சரிசெய்யும்போதும் இணையத்தளம் மேம்படும். ஆகையால், மேலும் பலர் இத்தளத்தைப் பயன்படுத்தவேண்டும், பயனடையவேண்டும்," என்றார் திரு சரவணன்.
"இவ்விணையத்தளத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்காக விரைவில் சமூக கருத்துத்தளம் ஒன்றையும் நாங்கள் அறிமுகப்
படுத்தவிருக்கிறோம். இதன்வழியாக திரட்டப்படும் மக்களின் கருத்துகளுக்கேற்ப இணையத்தளத்தில் வழங்கப்படும் சேவைகளை மெருகூட்டுவோம்" என்றார் தொடர்பு தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்புப் பிரிவு நிர்வாகி கௌரி கனகராஜா, 27.