மூத்தோர் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஏதுவாக தீவு முழுவதும் 50 புதிய நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் வரை அமைக்கப்படும். அவற்றில் முதல் மூன்று நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.
ஈசூன் சென்ட்ரலில் உள்ள நீ சூன், தெலுக் பிளாங்கா, சாய் சீயில் உள்ள அன்சார் ஆகிய இடங்களில் இந்தப் புதிய நிலையங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின.
அந்த 50 நிலையங்களில் 39 நிலையங்கள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. ஜூலை இறுதிக்குள் அவை படிப்படியாகத் திறக்கப்படும். இவற்றில் பெரும்பாலனவை வசிப்போர் குழு நிலையங்களில் அமைந்திருக்கும்.
பிஏ.4, பிஏ.5 ஓமிக்ரான் துணைத் திரிபுகளால் கொவிட்-19 தொற்று அதிகரித்துவரும் வேளையில், இந்த நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக இந்த நிலையங்கள் செயல்பட்டாலும், மற்ற வயதினரும் அங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 11.30 மணி வரையிலும் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இந்த நிலையங்கள் செயல்படும். கடைசிப் பதிவு மாலை 5 மணிக்கு இடம்பெறும். இந்த நிலையங்கள் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை வழங்குகின்றன.
இந்த நிலையங்களில் மொத்தம் 25 நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் சுழற்சி அடிப்படையில் இயங்கும்.
மூத்தோரில் 80,000 பேர் தங்களின் முதல் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சென்ற வாரம் தெரிவித்திருந்தார். அந்த எண்ணிக்கை 70,000க்குக் குறைந்துள்ளதாக நேற்று அவர் கூறினார்.
நீ சூன் சென்ட்ரலில் உள்ள நடமாடும் தடுப்பூசி நிலையத்தைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவருடன் இருந்தார்.
மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் நடமாடும் தடுப்பூசி நிலையங்களும் குழுக்களும் முக்கிய உத்தியாகத் திகழ்வதாக அமைச்சர் ஓங் சொன்னார்.
80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர் நான்காவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 80 வயதுக்குக் குறைவானோர், முதல் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகும் பாதுகாப்புடன் இருப்பர். என்றாலும், மூத்தோருடன் வசிப்போர், அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வோர், மருத்துவப் பிரச்சினை உடையோர் ஆகியோர் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
முதலிரு கொவிட்-19 தடுப்பூசிகளை மட்டும் போட்டுக்கொண்ட மூத்தோருடன் ஒப்புநோக்க, பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொண்ட மூத்தோர் கொவிட்-19 காரணமாக உயிரிழப்பதற்கான அல்லது கடுமையாக நோய்வாய்ப்படுவதற்கான சாத்தியம் குறைவு என்று அமைச்சர் ஓங் கடந்த வாரம் கூறியிருந்தார்.
அடுத்த கொவிட்-19 அலை ஏற்படுவதற்கு முன்பு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு மூத்தோரிடம் அவர் வலியுறுத்தினார்.

