துணைப்பாட வகுப்பு நடத்துவதாகக் கூறி, கற்றல் குறைபாடு அல்லது உடற்குறையுள்ள சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 54 வயது ஆடவர் ஒருவருக்கு நேற்று 45 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாலியல் குற்றங்களுக்காக ஒருவருக்கு இவ்வளவு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன்முறை.
மொத்தம் எட்டுப் பேரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்தை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார்.
2002 முதல் 2018 வரையிலான 16 ஆண்டு காலகட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களில் மூவரைக் கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருடைய தாயாருடன் அவர் உறவில் இருந்ததால், நீதிமன்ற உத்தரவு காரணமாக அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அந்தச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது அவர்களில் இருவருக்கு ஐந்து வயதாகவும் மூன்றாமவருக்கு எட்டு வயதாகவும் இருந்தது.
அந்தப் பாலியல் வன்கொடுமைகளை அந்த ஆடவர் காணொளி எடுத்தார். அந்த வன்கொடுமை 17 நிமிடங்கள் வரை நீடித்தது.
2018 ஜூன் மாதம் தம் மடிக்கணினியை விற்ற பிறகுதான் அவருடைய குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அந்த மடிக்கணினியில் ஆபாசப் படங்கள் இருந்ததைக் கண்டறிந்தவுடன், அதை வாங்கியவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அந்த ஆடவருக்குத் தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆங் செங் ஹாக், "சிறு வயது சிறார்களுக்கு எதிராக படுமோசமான பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றஞ்சாட்டப்பட்டவருக்குக் கடுமையான தண்டனை தேவை," என்று கூறினார்.
நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே சிறையில் இருந்து அந்த ஆடவர் விடுவிக்கப்படும்போது அவருக்கு 80 வயதாகிவிடும்.
தீர்ப்பு வெளியானபோது மாண்டரின் மொழியில் நீதிமன்றத்தில் பேசிய அந்த ஆடவர், "நான் செய்த தவற்றுக்காக மிகவும் வருந்துகிறேன். என் வாழ்நாள் முழுவதற்கும் அது என்னைத் துரத்தும்.
"நான் காயப்படுத்தியவர்களிடம் நான் மனமார மன்னிப்புக் கோருகிறேன். அவர்கள் என்னை மன்னித்துவிடுவார்கள் என நான் நம்புகிறேன்," என்றார்.

