இர்ஷாத் முஹம்மது
சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்குக் கருத்துகளை வழங்க முன்வருமாறு சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுத்தார் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங். கொவிட்-19 நோய்ப்
பரவல் சூழலுக்குப் பின் நாடு முக்கிய கட்டத்தில் இருப்பதாக அவர் சொன்னார்.
அந்தப் பங்களிப்புகள் 'முன்னேறும் சிங்கப்பூர்' எதிர்காலத் திட்டத்தின் ஓர் அங்கமாக அடுத்த ஆண்டு நடுவில் வெளியிடப்படும். கொள்கை பரிந்துரை களுடன் நாட்டின் இலக்குகளை அடைவதற்கு சமுதாயத்தின் வெவ்வேறு அங்கத்தினரும் மேன்மேலும் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதும் அந்த எதிர்காலத் திட்டத்தில் குறிப்பிடப்படும். தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) ஏற்பாட்டில் ஒன் மெரினா பொலிவார்ட்டில் அமைந்துள்ள என்டியுசி சென்டர் கட்டடத்தில் நேற்று நடைபெற்ற தொழிலாளர் இயக்கக் கலந்துரையாடலில் துணைப் பிரதமர் உரையாற்றினார். ஓராண்டு நடைபெறும் 'முன்னேறும் சிங்கப்பூர்' திட்டத்தை திரு வோங் வழிநடத்துவார். வேலைகள், வீடமைப்பு, சுகாதாரம் உள்பட ஆறு அம்சங்களுக்கும் நான்காம் தலைமுறைத்
தலைவர்கள் ஒவ்வொருவரும் தலைமை ஏற்பார்கள்.
இம்மாதம் 13ஆம் தேதி துணைப் பிரதமராகப் பதவியேற்ற பின்னரும் கடந்த ஏப்ரல் மாதம் ஆளும் மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைக் குழுவின் தலைவராக, சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக அடையாளம் காணப்பட்டபின் திரு வோங் ஆற்றிய முதல் பிரதான உரையாக இது கருதப்படுகிறது. மாறிவரும் சூழலுக்கேற்ப சமூகப் பிணைப்பைப் புதுப்பித்து மேம்படுத்துவது முக்கியம் என்றும் நிதி அமைச்சருமான திரு வோங் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் போராட்டங்களைப் பற்றி முன்பைவிட தற்போது நன்கு அறிவதாகக் கூறிய திரு வோங், அந்தக்
கவலைக்குரிய அம்சங்கள் குறித்தும் ஒன்றுசேர்ந்து அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் உண்மையான உரையாடல்களில் ஈடுபட விரும்புவதாகச் சொன்னார். வாழ்வின் தொடக்கக் காலத்திலிருந்தே மாணவர்கள் செயல்முறையில் சிக்கி இருப்பதாக எண்ணுவது, பட்டதாரிகளும் ஊழியர்களும் அவர்களின் வாழ்க்கைத் தொழில் பற்றி பதற்றம் அடைவது, சொத்துச் சந்தையின் விலையேற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாத கவலை, வேலையிழந்த முதிய ஊழியர்களுக்குப் புதிய வேலை கிடைப்பதில் உள்ள போராட்டம் போன்றவற்றை அவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.
சமூகப் பிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு வோங், அது தோல்வியுற்றால் சிங்கப்பூரர்களில் பெரும் பகுதியினர் சமூகத்தில் இருந்து விலகியவர்களாக எண்ணக்
கூடும்.
"அரசாங்கத்தின் மீதும் சமுதாயத்தின் வெவ்வேறு அங்கத்தினர் மீதும் உள்ள நம்பிக்கை சீர்குலையும். ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பல நாடு
களைப் போன்று சிங்கப்பூரின் அரசியல் தடம்புரண்டு, நிலைகுத்திபோகும். நம்பிக்கை குறைந்த சமுதாயம் உருவெடுக்கும். அப்படி நடந்தால் சிங்கப்பூர் நிச்சயமாக பிளவுபட்டுவிடும்," என்று அவர் எச்சரித்தார்.
மாறாக, சமூகப் பிணைப்பை வலுப்படுத்தினால் ஒவ்வொரு சவாலையும் வாய்ப்பாக மாற்றலாம் என்றும் இத்திட்டத்தைத் தொடங்க முக்கிய காரணமாக அதைக் குறிப்பிட்டார். சமூகப் பிணைப்பு நான்கு முக்கிய அம்சங்களில் மாறக்கூடும் என்று விளக்கினார்.
எப்படி நமது பொருளியல் செயல்படுகிறது என்பதும் அது ஒருசிலருக்கு மட்டும் நன்மை அளிக்கிறதா அல்லது அனைவருக்கும் பயனளிக்கிறதா என்பதும் முதல் அம்சம்.
"நாம் செய்யும் அனைத்திலும் சிங்கப்பூரர்கள் மையமாக இருப்பார்கள். அதன்படி பொது வீடமைப்பு தொடர்ந்து கட்டுப்படியாக இருப்பதை உறுதிசெய்வோம். குறிப்பாக, இளையர்களுக்கும் முதல்முறையாக வீடு வாங்கு
வோருக்கும். வேலைநலன், படிப்
படியான சம்பள உயர்வுமுறை போன்ற திட்டங்கள் வழி எளிதில் பாதிப்படையக்கூடிய ஊழியர்களைத் தொடர்ந்து கைதூக்கிவிடுவோம்," என்றார் அவர்.
இரண்டாம் அம்சமாக தகுதிக்கு முன்னுரிமையைக் குறிப்பிட்ட அவர், நம் சமுதாயத்திற்கு உகந்த கொள்கை என்று சுட்டினார்.
"அந்தக் கொள்கைக்குப் பாதகங்கள் இருப்பதும் நமக்கு தெரியும். ஆனால் அதை முற்றிலும் ஒதுக்கிவிடமுடியாது. ஆனால் அதை மேம்படுத்தி, மேலும் வெளிப்படையான பரிவுமிக்க தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை நாம் அமைக்க முடியும்," என்றார்.
சமூக ஆதரவு, ஒற்றுமை ஆகிய இரண்டு அம்சங்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றன.
தொழில்நுட்ப, பொருளியல் இடையூறுகள் தற்போதைய சமூக ஆதரவுத் திட்டங்கள் போது
மானதா என்ற கேள்வியை எழுப்பு வதாக அவர் சொன்னார்.
மாறிவரும் சமூகப் பிணைப்பு எவ்வாறு சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதையும் வருங்காலத் தலைமுறையினருக்கு என்ன வழங்கபோகிறோம் என்பதையும் பரிசீலிக்கவேண்டும் என்றார் திரு வோங்.
சிங்கப்பூரின் அடித்தளமான
பல்லினக் கொள்கை உள்பட சில அம்சங்கள் மாறாது, மாறக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

