அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொள்வது குறித்துப் பிரதமர் லீ
விமர்சனங்கள் தவறானவையாகவோ நியாயமற்றவையாகவோ இருந்தால் அரசாங்கம் மரியாதையான முறையில் அவற்றை நிராகரிப்பதுடன் குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு சிங்கப்பூரர்களுக்கு உரிய விளக்கம் தருவதில் கவனம் செலுத்தும் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
மக்களுக்குச் சேவையாற்றுதல், அவர்களுக்கு உகந்ததைச் செய்தல், நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்தல் ஆகியவையே அரசாங்கத்தின் முக்கியக் கடமைகள். எனவே எது சரி, எந்தப் பாதையில் செல்ல வேண்டும், நாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது போன்றவை குறித்து அரசாங்கம் உறுதியாக முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்காகச் சென்ற வாரம் ருவாண்டா சென்றிருந்த திரு லீ, அந்நாட்டு அதிபர் பால் ககாமேயுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசினார். ருவாண்டா, சிங்கப்பூர் இரண்டுமே வளர்ந்துவரும் வேளையில் குறைகூறல்களை எதிர்கொண்டதைச் சுட்டிய செய்தியாளர்கள் அவற்றுக்கிடையே நாட்டின் முன்னுரிமையைத் தொடர்ந்து, வெற்றியடைய எது உந்துதலாக இருந்தது என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளிக்கையில் திரு லீ இவ்வாறு கருத்துரைத்தார்.
'என்யுஎஸ்' மாணவர்கள் 20க்கும் மேலானோருக்கு கொவிட்-19 தொற்று
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ('என்யுஎஸ்') வர்த்தகக் கல்லூரியில் புதிதாகச் சேரவிருக்கும் மாணவர்களுக்கு அறிமுக நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்ட முகாமில் கலந்துகொண்ட 20க்கும் மேலானோருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
200க்கும் அதிகமானோர் இந்த முகாமில் உள்ளரங்க, வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்றனர். வெளிப்புற நடவடிக்கைகளின்போது முகக்கவசத்தைக் கழற்றிய மாணவர்கள் உள்ளரங்க நடவடிக்கைக்குத் திரும்பியபோது மீண்டும் முகக்கவசம் அணியத் தவறியதாக பங்கேற்ற மாணவர்களில் ஒருவரை மேற்கோள்காட்டி ஷின் மின் நாளிதழ் தகவல் வெளியிட்டது. பாதுகாப்பு நடவடிக்கை குறித்து குழுத் தலைவர்கள் நினைவுபடுத்தியதாகக் கூறிய மற்றொரு பங்கேற்பாளர், 17 பேர் இருந்த தனது குழுவில் மூன்று பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானதாகக் கூறினார். நடவடிக்கைகளுக்கு முன்னதாகப் பாதுகாப்பு நடைமுறைகள் மாணவர்களுக்கு நினைவுறுத்தப்பட்டதாகக் கல்லூரியின் பேச்சாளர் தெரிவித்தார்.

