போர்க்காலப் படைவீரர் ஒருவர் தன் தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திலிருந்து விரைந்து முகாமிற்குத் திரும்பவேண்டியிருந்தது. மற்றொருவர் தன் மாணவர்களின் பாடங்களைத் திருத்துவதற்காக முகாமிலிருந்து தான் கற்பிக்கும் பள்ளிக்கூடத்திற்கு அவசரமாகச் செல்லவேண்டியிருந்தது.
இவ்விரண்டு உண்மை சம்பவங்களும் தேசிய சேவையின் 55ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் இடம்பெற்ற இரண்டு காணொளி
களின் கருப்பொருள்களாகும்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் 'டியூடி' என்னும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட ஒன்றரை நிமிட காணொளி மற்ற 78 காணொளிகளையும் தோற்
கடித்து முதல் பரிசைப் பெற்றது.
அதோடு, அந்தக் காணொளி 'பெஸ்ட் லைஃப் ஆக்ஷன்' என்ற பட்டத்தையும் பெற்றது.
இரண்டாவது காணொளியின் தலைப்பு, 'ஒன் மேன், மெனி ஹேட்ஸ்'. இந்தக் காணொளி எவர்கிரீன் உயர்நிலைப்பள்ளியின் மின்னியல் தகவல்சாதனக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் தயாரிக்கப்பட்டது.
போர்க்காலப் படைவீரர்களை மதித்துப் போற்றுவோம் என்ற போட்டியில் பரிசுகளை வென்ற ஒன்பது காணொளிகளுள் இவ்விரண்டு காணொளிகளும் அடங்கும்.
சிங்கப்பூர் ஆயுதப்படை தினம் (ஜூலை 1) மற்றும் தேசிய தினத்தை (ஆகஸ்ட் 9) முன்னிட்டு போட்டியில் வெற்றிபெற்ற காணொளிகள் சாஃப்ரா மனமகிழ் மன்றங்களிலும் குடியிருப்புக் கட்டடங்களின் வெற்றுத்தளத்திலும் ஒளிபரப்பப்படும்.

