அடுத்த ஆண்டு தொடக்கநிலை முதலாம் வகுப்பில் சேரும் சிறார்களுக்கான முதல்கட்ட பதிவு இன்று தொடங்கியது.
முதல்கட்ட பிரிவில் பள்ளிகளில் பயிலும் தற்போதைய மாணவர்களின் உடன்பிறப்புகளால் நிரப்பப்படும். இந்தப் பிரிவில் பதிவுசெய்யும் அனைத்து பிள்ளைகளும் தாங்கள் விரும்பும் பள்ளிகளில் இடங்கள் கிடைப்பது நிச்சயம்.
இதற்கான பதிவு இணையம் வழியாக மட்டுமே இடம்பெறும். நாளை மாலை பதிவு செய்யும் நடவடிக்கை முடிவடையும்.
முன்னுரிமை பதிவுக்குத் தகுதிபெறாத பிள்ளைகளுக்கு இவ்வாண்டு கூடுதல் இடங்கள் அளிக்கப்படும். 2சி எனும் பிரிவில் கூடுதல் 40 இடங்கள் ஒதுக்கப்படும். இந்தப் பிரிவில் பள்ளிக்கு அருகே வசிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், இவ்வாண்டு 2ஏ(1), 2ஏ(2) ஆகிய இரண்டு பிரிவுகள் 2ஏ என்று இணைக்கப்படும்.
அந்தந்த பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள பெற்றோர், அந்தந்த பள்ளிகளில் படித்த பெற்றோர், உடன்பிறப்புகள் உள்ள அனைத்து பிள்ளைகளும் ஒரே பிரிவின் கீழ் பதிவுசெய்யவேண்டும்.
அனைத்து தரப்பினரையும் பள்ளிகள் உள்ளடக்குவதை உறுதிசெய்ய இந்த மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் முன்னதாக கூறினார்.

