சிங்கப்பூரரான ஜெயா அய்யாதுரைக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உயரிய கௌரவம்

சிங்கப்பூரரான ஜெயா அய்யாதுரைக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உயரிய கௌரவம்

1 mins read
fd81e526-a407-4f20-bbea-b31c4bdacc54
ஹாவ் பார் வில்லாவில் திரு ஜெயா அய்யாதுரை. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும் மரபுடைமை சார்ந்த தொழில்முனைவருமான திரு ஜெயா அய்யாதுரை பிரிட்டிஷ் பேரரசின் வீரத் திருத்தகை அணியின் கௌரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் இதை புதன்கிழமை (29 ஜூன்) அன்று தெரிவித்தது.

சிங்கப்பூர், பிரிட்டிஷ், காமன்வெல்த் ஆகியவற்றின் ராணுவ வரலாற்றையும் போர் குறித்த நினைவுகளையும் சிங்கப்பூரில் பாதுகாக்கச் செய்த பங்களிப்புக்காக திரு அய்யாதுரை கௌரவிக்கப்பட்டார் என்று தூதரகம் கூறியது.

லாப்ரடோர் பீரங்கித் தளம், சாங்கி அரும்பொருளகம், ஃபோர்ட் கேன்னிங் மலையில் உள்ள பேட்டல்பாக்ஸ் காட்சியகம், சைனாடவுன் மரபுடைமை நிலையம், ஹாவ் பார் வில்லா ஆகியவற்றில் பணியாற்றியதன் வழி, திரு அய்யாதுரை நடத்தும் நிறுவனங்கள் சிங்கப்பூரின் மரபுடைமைக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளதாகவும் பிரிட்டிஷ் தூதரகம் சொன்னது.

திரு ஜெயா அய்யாதுரை 'சிங்கப்பூர் ஹில்டரி கன்சல்ட்ன்ட்ஸ்' எனும் வரலாற்று ஆலோசனை நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். 'ஜர்னிஸ்' எனும் வரலாற்றுசார்ந்த சுற்றுலா நிறுவனத்தையும் நடத்துகிறார்.

பொதுச் சேவை, சமூகநலப் பணி, கலை, கலாசாரம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிக்கும் பிரிட்டிஷ் குடிமக்களுக்கும் காமன்வெல்த் நாட்டு மக்களுக்கம் பிரிட்டிஷ் பேரரசின் வீரத் திருத்தகை அணிப் பதக்கங்களும் கெளரவங்களும் வழங்கப்படுகின்றன.