மாதின் சடலம் அருகே புகைப்படத்துக்கு நின்ற காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்

மாதின் சடலம் அருகே புகைப்படத்துக்கு நின்ற காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்

2 mins read
a1189e59-bf68-4dad-ac24-8a29541a13b3
படம்: ஃபேஸ்புக்/டிரேசி லிம் -

உயிரிழந்த ஒரு மாதின் சடலத்தை மூடியிருந்த நீலக் கூடாரத்தின் அருகே புகைப்படம் எடுத்துக்கொண்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மூடப்பட்டிருந்த மாதின் சடலத்துக்கு அருகே நின்ற அதிகாரியின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டன. அவற்றில், சடலத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த காவல்துறைத் தடுப்புக்குள் நின்றுகொண்டு, இரண்டு கைகளையும் உயர்த்தி, கைவிரல்களைக் கொண்டு 'V' என்று சைகை செய்து கேமராவைப் பார்த்திருந்தார் அந்த அதிகாரி.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) அன்று அந்தச் சம்பவம் நடந்தது.

அது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் புதன்கிழமை விளக்கமளித்த காவல்துறை, அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றது.

அந்தச் சம்பவத்தில் புளோக்கின் அடித்தளத்தில் மாதின் உடல் அசைவின்றி காணப்பட்டது. இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறை அதைக் குறிப்பிட்டது. "உயிரிழந்தவரின் குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு அந்த அதிகாரியின் செயலுக்காக காவல்துறை மன்னிப்பு கேட்டுக்கொண்டது," என்று பதிவு தெரிவித்தது.

காவல்துறை அதிகாரி அங்கு தன்னைத் தானே புகைப்படம் எடுக்கவில்லை என்றபோதும் அங்கு மற்றவர்கள் இருந்தபோது அவர் தகுந்தவாறு நடந்துகொள்ளவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.

சம்பவங்களைக் கையாளும்போது, எல்லா காவல்துறை அதிகாரிகளும் தொழில் சார்ந்த மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை குறிப்பிட்டது.

உயிர் இழந்த மாது தமது உறவினர் என்று கூறிய திருவாட்டி டிரேசி லிம் என்பவர், காவல்துறை அதிகாரி நின்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதை ஏற்றுக்கொள்ள முடியாத, மரியாதை அற்ற செயல் என்று அவர் வருணித்திருந்தார்.

பின்னர் அது குறித்து பதிவிட்ட அவர், காவல்துறை தங்களைத் தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டுள்ளதாகக் கூறினார்.