போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து அமைச்சர் சண்முகம் விளக்கம்
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுவதை விமர்சிப்பவர்கள் அது பல உயிர்களைக் காப்பாற்றுகிறது, சிங்கப்பூரர்களை பாதுகாக்கிறது என்பதை கவனிக்கத் தவறி விடுகிறார்கள் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்து உள்ளார்.
புதன்கிழமை அன்று ஒளியேற்றப்பட்ட 'பிபிசி ஹார்ட்டோக்' என்ற நிகழ்ச்சிக்கு அவர் பேட்டிஅளித்தார்.
ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பதையே பிபிசி பார்க்கிறது. ஆனால் ஆயிரக்கணக்கான உயிர் களைப் பாதிக்கும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மோசமான போதைப் பொருள் சூழ்நிலையை பார்க்கத் தவறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
"போதைப்பொருள் கடத்தலுக்காக ஒருவரை தூக்கிலிடுவது துயரமாகிறது. அதே சமயத்தில் போதைப் பொருளைப் பயன்படுத்து வதால் மில்லியன் கணக்கானவர்கள் இறக்கின்றனர் என்பது புள்ளி விவரம்போல் ஆகிவிடுகிறது," என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் கடத்தலுக்கான கட்டாய மரணதண்டனை விதிப்பது சரியான கொள்கையா என்பதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்று நேர்காணல் செய்த ஸ்டிவன் சாக்கர் அமைச்சரிடம் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த திரு சண்முகம், போதைப்பொருள் கடத்தலை தடுத்து நிறுத்துவது தெளிவாக தெரிவதால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.
"போதைப்பொருளைக் கடத்து பவர்களுக்கு பணம் தேவை. ஆனால் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர்களின் வாழ்க்கையை இது நாசமாக்குகிறது. அவர்களுடைய குடும்பத்தையும் அழிக்கிறது என்றார் அவர்.
2021ஆம் ஆண்டின் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டிய அவர், ஒரே ஆண்டில் 500,000 மரணங்களுக்கு போதைப் பொருள் தொடர்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் மிதமிஞ்சிய போதைப் பொருளைப் பயன்படுத்தி யதற்காக ஓர் ஆண்டில் 100,000 பேருக்கு மேல் இறக்கின்றனர். போதைப்பொருள் நெருக்கடி காரணமாக முதல் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக 2015ல் ஆயுளும் குறைந்துவிட்டது என்று மேலும் அமைச்சர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் கடுமையான பிரச்சினை என்பதை ஒப்புக்கொண்ட திரு சாக்கர், ஆனால் அறிவுத்திறன் 69 என குறைவாக இருந்த மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கத்தை இவ்வாண்டு முற்பகுதியில் தூக்கிலிட்டது இரக்கமான செயலா என வினவினார்.
"நாகேந்திரனுக்கு அறவுத்திறன் குறைபாடு இருந்ததாக நீதிமன்றம் கண்டறியவில்லை. இதனை அவரது வழக்கறிஞர்கள் அமர்த்திய மனநல நிபுணர்கள் உறுதிப்படுத்தி யிருந்தனர். சிங்கப்பூருக்குள் போதைப் பொருளைக் கொண்டு வருவதற்கான முடிவை அவர் நன்கு ஆராய்ந்து எடுத்திருந்தார்.
"2021 அக்டோபரில் அவரது இறுதி மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டபோது அமெரிக்காவில் இதேபோன்று அறிவுத்திறன் குறைந்த இருவர் தூக்கிலிடப்பட்டனர். அப்போது அவர்களுடைய வழக்கறிஞர்களும் இதே போன்று அறிவுத்திறன் குறைந்தவர்கள் என்று வாதிட்டனர்," என்று சண்முகம் சொன்னார். அமெரிக்காவில் தூக்கிலிடப்பட்ட இருவருக்கும் நாகேந்திரனுக்கும் அறிவுத்திறன் குறைபாட்டில் இருந்த வித்தியாசம் என்ன என்று திரு சண்முகம் கேட்டார். "1990களில் சிங்கப்பூரில் ஆண்டுக்கு 6,000 பேர் போதைப்ெபாருளுக்காகக் கைது செய்யப்பட்டனர். இப்போது இது, ஆண்டுக்கு 3,000ஆக குறைந்துள்ளது.
"முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இவ்வட்டாரத்திலும் சிங்கப்பூரிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது. கடுமையான தண்டனை இல்லையென்றால் இதனை ஒழிக்க முடியாது. தென்கிழக்கு ஆசியாவில் சாதனை அளவாக கைப்பற்றப்பட்ட ஒரு பில்லியன் போதை மாத்திரை கைப்பற்றப்பட்ட சூழல் இங்கு உள்ளது. அந்த நிலையில்தான் சிங்கப் பூரும் உள்ளது. சிங்கப்பூரின் கடுமையானச் சட்டம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது," என்று அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.

