சடலம் மறைத்து வைக்கப்பட்ட கூடாரத்தின் முன்பு புகைப்படத்திற்கு காட்சியளித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.
சமூக ஊடகத்தில் பரவிய புகைப்படங்களில் அவர் 'வி' என்று தனது கையை உயர்த்திக் காட்டுகிறார்.
காவல்துறை சுற்றிவளைக்கப்பட்ட பகுதியில் சடலம் நீல நிற கூடாரம் போட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் புகைப்படத்திற்கு காட்சியளித்துள்ளார்.
இம்மாதம் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
புளோக்கின் அடியில் ஒரு பெண் அசைவற்றுக் கிடந்த சம்பவத்தை காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணமாக வகைப்படுத்தியிருந்தனர்.
"அதிகாரி தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை.
"ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் முறையற்ற வகையில் அவர் நடந்துகொண்டார்," என்று ஃபேஸ்புக் பதிவில் காவல்துறை தெரிவித்தது.
அந்த அதிகாரி மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.
சம்பவத்தில் இறந்த பெண் தனது அத்தை என்று கூறிய ஃபேஸ்புக் பதிவாளரான டிரேசி லிம், அந்த அதிகாரியின் புகைப்படத்தை பதிவேற்றி ஏற்றுக்கொள்ள முடியாத, அவமதிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
"இறந்தவருக்கு அடிப்படை மரியாதையைக்கூட காட்டாமல் ஏதோ கோப்பையை வென்றதுபோல அவர் காட்சியளித்துள்ளார்," என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
இதன் பிறகு புதன்கிழமை மதியம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் காவல்துறையினர் தன்னை அழைத்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுத்ததை தான் பாராட்டுவதாகவும் டிரேசி லிம் குறிப்பிட்டிருந்தார்.

