நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ('என்டியு') ஆய்வு ஒன்றில் தொண்டூழியராகப் பதிவு செய்தவர் தனக்கு கொவிட்-19 தொற்றியதாகப் பொய்யுரைத்தது நிரூபிக்கப்பட்டதால் நேற்று அவருக்கு 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
பால் சான் கின் நாங் எனும் 42 வயது ஆடவர், ஆய்வின் எந்தக் கட்டத்திலும் அபராதம் ஏதும் செலுத்தாமல் தான் விலகிக்கொள்ளலாம் என்று தெரிந்திருந்தும் பொய்யுரைத்ததை ஒப்புக்கொண்டார்.
செப்டம்பர் 6, 2020ல் இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் இருவருக்குக் கட்டாய விடுப்பு தர நேரிட்டது.
மறுநாள் திட்டமிடப்பட்டிருந்த ஆய்வு நடவடிக்கைகளையும் 'என்டியு' ரத்து செய்தது. ஆய்வு நடவடிக்கைகளில் தடை ஏற்பட்டதால் பல்கலைக்கழகம் கூடுதலாகச் செலவழித்ததாகவும் கூறப்பட்டது.
முடிவெடுத்தலின்போது மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில், பங்கேற்பாளர்கள் ஆய்வின் எந்தக் கட்டத்தில் பங்கெடுக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் பணம் வழங்கப்பட்டது.
செப்டம்பர் 1, 2020ல் நடைபெற்ற முதல் நிகழ்ச்சி சுமுகமாகச் சென்றதாகவும், செப்டம்பர் 7, 2020ல் இடம்பெறவிருந்த இரண்டாம் நிகழ்ச்சி குறித்து நினைவூட்ட அதற்கு முன்தினம் ஆய்வுக்குழுமின்னஞ்சல் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.
சான் தனக்கு கொவிட்-19 கிருமி தொற்றியதால் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பதாகவும், முதல் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததற்கான பணத்தை அனுப்பும்படியும் பதில் மின்னஞ்சல் அனுப்பினார்.
சானுடன் தொடர்பில் இருந்த ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடும் பொருட்டு, கொவிட்-19 தொற்று குறித்த மேல்விவரங்களைக் கேட்டு ஆய்வாளர் சானுக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சான், தனது மின்னஞ்சலை யாரோ ஊடுருவிப் பொய்யான தகவல்களை அனுப்பியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
கொவிட்-19 தொற்றியோரின் பட்டியலில் சான் இடம்பெறவில்லை என்று 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி சுகாதார அமைச்சு பல்கலைக்கழகத்திடம் தெரிவித்தது. இதனையடுத்து 'என்டியு' நிர்வாகம் காவல்துறையிடம் புகார் செய்தது. விசாரணையில், மின்னஞ்சலில் பொய்யான தகவல் தந்ததை சான் ஒப்புக்கொண்டார்.

