மோசடிக்காரர்களிடம் $30.3 மில்லியனைப் பறிகொடுத்த 277 பேர்

மோசடிக்காரர்களிடம் $30.3 மில்லியனைப் பறிகொடுத்த 277 பேர்

1 mins read
790ae42c-5ddd-4b53-9425-d9191bb48fdc
கோப்புப் படம்: தி நியூ பேப்பர் -

சீன அதிகாரிகள் போல நடித்து மோசடி செய்தவர்களிடம் சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை குறைந்தது 277 பேர் $30.3 மில்லியனை இழந்துள்ளனர்.

காவல்துறை இதை வியாழன் (ஜூன் 30) அன்று தெரிவித்தது.

குறி வைக்கப்படுவருக்கு தொலைபேசி அழைப்புகள் வரும். அவற்றில் சீன சுகாதார அமைச்சு, உயர் நீதிமன்றம், அல்லது மற்ற அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் என்று கூறிக்கொண்டவர்களின் குரல் பதிவுகள் கேட்கும்.

காவல்துறை அதிகாரிகள் போல நடிக்கும் மோசடிக்காரர்களை அழைக்குமாறு பதிவில் கூறப்படும்.

அவ்வாறு அழைத்தவர்கள் கள்ளப் பணப் பரிமாற்றம் அல்லது மற்ற குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருவதாக மோசடிக்காரர்கள் கூறுவார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட, வங்கி விவரங்களை அவர்கள் கேட்டுப் பெறுவார்கள்.

சில நேரங்களில் விசாரணைக்காக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றிவிடக் கூறுவார்கள். அல்லது பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து போலி ஆவணங்கள் கொடுப்பார்கள் அல்லது வாங்கிக்கொள்வார்கள்.

விசாரணையை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கூறுவார்கள்.

பின்னர்தான் தாங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதை பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்துகொள்வார்கள்.

சிங்கப்பூரில் விசாரணை நடத்தவோ, யாரையும் கைது செய்யவோ, அல்லது விசாரணையில் உதவும்படி கூறவோ வெளிநாட்டு அரசாங்கங்களின் சட்ட, காவல்துறைகளுக்கு இங்கு அதிகாரமில்லை என்று காவல்துறையினர் நினைவுபடுத்தினர்.

காவல்துறை விசாரணைக்காக மக்களின் வங்கியிலிருந்து பணத்தை மாற்றிவிடும்படி கூறாது.

தொலைபேசி எண்ணுக்கு முன்னால் + என்று காட்டும் அழைப்புகளைப் பெறும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர்.