சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் அனுபவங்கள், பங்களிப்புகள் ஆகியவற்றை அங்கீகரித்து அவற்றைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்
பட்டுள்ள காட்சிக்கூடம் நேற்று திறந்துவிடப்பட்டது.
அதில் கலந்துகொண்ட மனிதவள அமைச்சர் டான் சீ லெங், வெளிநாட்டு ஊழியர்களின் உழைப்புக்கும் முயற்சிகளுக்கும் சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து தகுந்த அங்கீகாரத்தைக் கொடுப்பர் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள் பங்களித்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இக்காட்சிக்
கூடம் திறக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது அவர்களிடம் காணப்பட்ட மீள்திறனைப் பாராட்டி, கௌரவிப்பதே இந்தக் காட்சிக்கூடத்தின் இலக்கு," என்று டாக்டர் டான் கூறினார். கேலாங் பாருவில் உள்ள நம்பிக்கை, பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழுவின் (ஏஸ்) தலைமையகத்தில் புதிய காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள காட்சிக்கூடத்தில் 150க்கும் அதிகமான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் தனிப்பட்ட ஊழியர்களின் படங்களும் அவர்
களைப் பற்றிய கதைகளும்
காட்சிக்கூடத்துக்கு வருபவர்களை வரவேற்கின்றன.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் கிருமிப் பரவல் தாண்டவமாடியது. அந்த இக்கட்டான நிலையையும் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மருத்துவக் குழுக்கள் எவ்வாறு விரைந்தனர் என்பதையும் காட்சிக்கூடத்தின் இரண்டாவது பிரிவு காட்டுகிறது. கூடுதல் மீள்திறன்மிக்க வெளிநாட்டு ஊழியரணியை உருவாக்க மனிதவள அமைச்சு கொண்டுள்ள திட்டம் குறித்து மூன்றாவது பிரிவு விளக்குகிறது. இந்தத் திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஊழியர்களுடைய தங்குமிடத் தரத்தை உயர்த்துவது, தரமான மற்றும் கட்டுப்படியான விலையில் எளிதில் கிடைக்கக்கூடிய சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அவர்களுக்கு வழங்குவது, அவர்
களது சமூக நல்வாழ்வை மேம்படுத்துவது ஆகியவை திட்டத்தில் அடங்கும்.
வெளிநாட்டு ஊழியர்களை உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களில் அவர்களை ஈடுபடுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளைப் பற்றி நான்காவது பிரிவில் அறிந்து கொள்ளலாம். காட்சிக்கூடத்தி
லிருந்து கிளம்பிச் செல்வதற்கு முன்பு வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாசகங்களை ஒட்டுவில்லைகளில் எழுதி சுவர்களில் ஒட்டலாம்.
காட்சிக்கூடம் பொதுமக்களுக்கு இன்னும் திறந்துவிடப்படவில்லை. மனிதவள அமைச்சின் பள்ளிப் பங்களித்துவத் திட்டத்தின்கீழ் உயர்க்கல்வி மாணவர்
களுக்குக் காட்சிக்கூடத்தில் வழிகாட்டிகளுடனான சுற்றுலாக்கள் நடத்தப்படும். அடுத்த மாதத்திலிருந்து வெளிநாட்டு ஊழியர்களும் காட்சிக்கூடத்தைக் காண ஏற்பாடு கள் செய்யப்படும். காட்சிக்
கூடத்தை நேற்று சுற்றிப் பார்த்த 'ஃபிரண்ட்ஸ் ஆஃப் ஏஸ்' தொண்டூழியரான 34 வயது சண்முகம் கணேசன், தம்மைப் போன்ற வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படுவதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.

