சிங்கப்பூரின் கடலோரக் காவல்படை, சிங்கப்பூர் நீரிணையில் எதிர்கொள்ளும் மிரட்டல்களை ஆகச்சிறந்த வகையில் ஆற்றலுடன் சமாளிப்பதற்காக அதன் ரோந்துப் படகுகளை மேம்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டு வரும் 42 புதிய படகுகளை பிரானி தீவில் உள்ள கடலோரக் காவல்படை தலைமையகத்தில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
பழைய ரோந்துப் படகுகளுக்கு மாற்றாக புதிய படகுகள் சிங்கப்பூரின் கடலோரப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கா.சண்முகம், அதிக அளவு கப்பல் போக்குவரத்து மற்றும் கடலோரச் சூழல் காரணமாக பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் சட்ட விரோதக் குடியேறிகள், வரிசெலுத்தப்படாத பொருள்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நடைபெறலாம் என்று குறிப்பிட்டார்.
இதனால் சிங்கப்பூர் எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்றார்.
கடந்த ஆண்டு கடல் வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயற்சி செய்த 24 சட்டவிரோதக் குடியேறிகளை கடலோரக் காவல்படை கைது செய்தது. அது மட்டுமல்லாமல் சிங்கப்பூர் நீரிணையில் ஊடுருவ முயன்ற 5,600க்கும் மேற்பட்ட கலன்களை அது தடுத்து நிறுத்தியுள்ளது. இதன்படி பார்த்தால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 15க்கும் மேற்பட்ட ஊடுருவல்கள் நடக்கின்றன.
இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், கடத்தல்காரர்களும் சட்டவிரோதக் குடியேறிகளும் தங்களை எளிதில் அடையாளம் காண முடியாத படகுகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
"அதிவேக படகுகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். கடலோரத் தற்காப்பு அரண்களையும் மீறி கைது செய்வதிலிருந்து அவர்கள் தப்பிச் செல்கின்றனர். நமது சிறிய கடற்பரப்பினால் நமது கரையை அவர்கள் அடைவதற்கு முன்பு பதில் நடவடிக்கை எடுக்க நேரமில்லை," என்றும் அவர் ெசான்னார்.
இந்த நிலையில் மிரட்டல்களைக் கண்டறிந்து அவற்றை ஒடுக்குவதற்கான செயல்திறனை வலுப்படுத்த கடலோரக் காவல்படை ரோந்துப் படகுகளை மேம்படுத்தியுள்ளன.
புதிய படகுகளில் 24 ஐந்தாம் தலைமுறை 'பிடி' வகுப்பு ரோந்துப் படகுகள், 10 மூன்று-தொடர் 'பிசி' வகுப்பு ரோந்துப் படகுகள், எட்டு மூன்றாம் தலைமுறை 'பிஜே' வகுப்பு சுற்றுக்காவல் படகுகளும் இடம்பெற்றுள்ளது.
புதிய ஐந்தாம் தலைமுறை 'பிடி' வகுப்பு ரோந்துப் படகுகள் 1998ல் அறிமுகப்படுத்தப்பட்ட 3ஆம் தலைமுறை படகுகளுக்கு மாற்றாக அமையும்.
முக்கியமாக கடல் சீற்றம் அதிகம் காணப்படும் சிங்கப்பூரின் தெற்கு கடல் பகுதியில் அவை சுற்றுக் காவலில் ஈடுபடும்.
முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பழைய படகுகளைவிட புதிய படகுகள் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை.
கடல் கொந்தளிப்பின் அதிர்ச்சியைத் தாங்கக்கூடிய இருக்கைகளும் புதிய படகுகளில் பொருத்தப்பட்டுள்ளன.

