சிங்கப்பூரும் மலேசியாவும் மின்னிலக்கம், பசுமை பொருளியல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப் படுத்த இணக்கம் தெரிவித்துள்ளன. நேற்று இரு நாட்டின் அமைச்சர்களும் சந்தித்தபோது இந்த இணக்கம் காணப்பட்டது.
கோலாலம்பூரில் மலேசியாவின் மூத்த அமைச்சரும் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சருமான முகம்மது அஸ்மின் அலியை சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் சந்தித்தார்.
அப்போது இரு துறைகளிலும் ஒத்துழைப்பு ஏற்பாடு குறித்து விவாதங்களைத் தொடங்க இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டதாக சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இதற்கான ஏற்பாடு இவ்வாண்டு இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் நீடித்த, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு மின்னிலக்கம், பசுமை பொருளியல் இன்றியமையாதது என்பதை இரு அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டதாக அறிக்கை தெரிவித்தது.
ஒத்துழைப்பையும் கலந்துரையாடலையும் வலுப்படுத்தும் நோக்கத்தில் ஒத்துழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு துறைகள் தொடர்பான எதிர்கால இருதரப்பு ஒத்துழைப்புக்கும் அது அடித்தளமாக இருக்கும்.
தொழில் முயற்சி, தொழில்மயமாக்கல், முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இரு நாடுகளிலும் உள்ள வர்த்தகங்களுக்கு இந்த ஏற்பாடு பரந்த அளவிலான அணுகூலன்களை வழங்குகிறது.
இது குறித்து கருத்துரைத்த அமைச்சர் கான், இரு நாடுகளுக்கு இடையிலான தற்போதைய பொருளியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள புதிய ஏற்பாடு இரு நாடுகளின் கடப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றார்.
இரு நாடுகளுக்கு இடையிலான மின்னிலக்கத் தொடர்பும், பாரம்பரிய வர்த்தகத்தை மின்னிலக்கமயமாக்க வேண்டிய அவசியத்தையும் கொவிட்-19 கொள்ளைநோய் உணர்த்தியுள்ளதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
மின்னிலக்கப் பொருளியலில் இரு நாடுகளும் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயாராக சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து பணி யாற்றுவதும் ஒத்துழைப்பதும் முக்கியம் என்றும் அது வலியுறுத் தியது.

