மலேசியாவில் நிகழ்ந்த மிக மோசமான கார் விபத்தில் சிங்கப்பூரரான 28 வயது பெண் மரணமடைந்தார்.
மலேசியாவின் கிழக்கு கடலோரத்தில் உள்ள நெடுஞ்சாலையில் புதன்கிழமை மாலை 5.15 மணி அளவில் விபத்து நிகழ்ந்ததாக ஷின் மின் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியர்களான இரண்டு பெண்களுடனும் ஓர் ஆணுடனும் அவர் காரில் பயணம் செய்துள்ளார்.
இரு பெண்களில் 30 வயது பெண்ணுக்கு இடது காலிலும் வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
நால்வரும் ரெடாங் தீவை நோக்கி காரில் சென்றதாகவும் மோசமான வானிலையில் அவர்கள் நெடுஞ்சாலையில் பயணம் செய்ததாகவும் ஷின் மின் தெரிவித்தது.
தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் ஏறி இறங்கியபோது கார் சறுக்கிச்சென்று பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த 28 வயது பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக சீன நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் மலேசிய காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்தார்.
புதன்கிழமை மதியம் ஒரு மணியளவில் நால்வரும் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு தீவை நோக்கிச் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. ரெடாங் தீவு அதன் தூய்மையான நீர், மணலுக்குப் பெயர்போனது.
சிங்கப்பூரரான அந்தப் பெண் கோலாலம்பூரில் 31 வயது காதலரு டன் தங்கியிருந்தார் என்றும் காரை அவரது காதலர் ஓட்டியதாகவும் ஷின் மின் தெரிவிக்கிறது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் படித்ததாக அறியப்படும் சிங்கப்பூர் பெண் உயிர்மருத்துவ நிறுவனத்தில் நிர்வாகியாகப் பணியாற்றியதாக நம்பப்படுகிறது.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக திெரங்கானு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் மலேசியாவுக்குப் புறப்பட்டு சென்றுள்ளனர்.

