வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் 950,000 சிங்கப்பூர்க் குடும்பங்கள் இரண்டாம் தவணை பொருள், சேவை வரிப் பற்றுச்சீட்டுகளையும் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியையும் இந்த மாதம் பெற்றுக்கொள்ள இருக்கின்றன.
இந்த மாதம் 110 வெள்ளி முதல் 190 வெள்ளி வரையிலான மதிப்புள்ள 'யூ சேவ்' பற்றுச்சீட்டுகளுடன் அரை மாதம் முதல் ஒரு மாதம் வரையிலான சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியும் வழங்கப்படும்.
மூன்று அறை, நான்கு அறை வீடுகளில் வசிப்போருக்கு இம்முறை அரை மாதக் கட்டணத் தள்ளுபடி மட்டுமே வழங்கப்படும். ஏப்ரலில் ஒரு மாதக் கட்டணத் தள்ளுபடி அளிக்கப்பட்டது.
தகுதிபெறும் குடும்பங்கள் ஆண்டுக்கு ஒன்றரை மாதம் முதல் மூன்றரை மாதம் வரையிலான கட்டணத் தள்ளுபடியைப் பெற்றுக்கொள்ளுமென்று நிதியமைச்சு கூறியது.
இந்த நிதியாண்டில் 'யூ சேவ்' பற்றுச்சீட்டுகளின் மதிப்பு இரட்டிப்பாகியிருப்பதால் ஓரறை, ஈரறை வீட்டில் இருப்போர் கிட்டத்தட்ட 10 மாத பயனீட்டுக் கட்டணத்துக்கு ஈடான தொகையைப் பெற்றுக்கொள்வர். மூன்று அறை, நான்கு அறை வீடுகளில் வசிப்போருக்கு இது ஏறத்தாழ ஆறு மாதக் கட்டணத்துக்கு ஈடாக இருக்கும்.
வீட்டின் பரப்பளவைப் பொறுத்து ஒவ்வொரு குடும்பமும் மொத்தம் 440 வெள்ளி முதல் 760 வெள்ளி வரை பெற்றுக்கொள்ளும். இந்த நிதியாண்டில் மொத்தம் 720 மில்லியன் வெள்ளி வழங்கப்படும்.

