எண் 2 ஜாலான் புக்கிட் மேராவில் 170 பேருக்கு காசநோய் இருந்ததை கடந்த மாதம் 24ஆம் தேதி சுகாதார அமைச்சு உறுதி செய்தது. இவ்வாண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஒரே புளோக்கில் வசிக்கும் ஏழு பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டதால் அந்தப் புளோக்கின் குடியிருப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இலவச காசநோய் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 170 பேருக்கு காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காசநோய், இருமல் மூலம் மற்றவர்களுக்குத் தொற்றக்கூடியது. கொவிட்-19 கொள்ளைநோயும் தொற்றுநோயாகும். ஆனால் இதில் எது மிகவும் ஆபத்தானது என்ற கேள்வி எழுந்துள்ளது.
காசநோய் எப்படி பரவுகிறது?: 'டிபி' என்று சுருக்கமாக அழைக்கப்படும் காசநோய், 'மைக்கோபெக்டீரியம் டுயூபர்குலோசிஸ்' (Myco bacterium tuberculosis) எனும் நுண்ணுயிர் மூலம் பரவும் தொற்று நோயாகும். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமல், தும்மல் அல்லது மூச்சுவிடும்போது நோய் பாதிப்புள்ள நீர்த்துளிகள் காற்றில் கலக்கின்றன. அவற்றை அருகில் இருப்பவர் சுவாசிக்கும்போது அவருக்கும் காசநோய் ஏற்படுகிறது.
காசநோயால் பாதிக்கப்பட்ட வருக்கு நெருக்கமாக இருந்தால் அல்லது நீண்டநேரம் தொடர்பில் இருந்தால் அந்நோய் தொற்றக் கூடும். ஆனால் பாதிக்கப்பட்டவர் தொட்ட பொருள்கள் அல்லது மேற் பரப்பு மூலம் காசநோய் பரவாது.
காசநோய் எத்தனை வகை?: காசநோய் பிற்பாடு (latent) ஏற் படுவது ஒரு வகை, அந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பது துடிப்புள்ள 'டிபி' மற்றொரு வகை (active).
சிலருக்கு, 'டிபி' நுண்ணுயிர் உடலில் நுழையும்போதே இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அவற்றை கொன்றுவிடுகின்றன. காசநோய் பாதிப்பே இருக்காது.
சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி யால் அந்தக் கிருமியைக் கொல்ல முடியாமல் போய்விடும். ஆனால் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவு வதை அது தடுத்துவிடும். இதைத்தான் பிற்பாடு ஏற்படும் காசநோய் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் நுண்ணுயிர் செயல்படாமல் மறைந்திருக்கும். காசநோய்க்கான அறிகுறி இவர் களுக்கு இருக்காது. இவர்கள் மூலம் மற்றவர்களுக்கு காசநோய் தொற்றாது. ஆனால் உடல் எதிர்ப்பு சக்தி குறையும்போது 'டிபி' நுண்ணுயிர் செயல்படத் தொடங்கும்.
காசநோய் இருந்தது தெரியாமல் சிகிச்சை பெறாமல் இருப்பவர்களில் 5 முதல் பத்து விழுக்காட்டினருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் 'டிபி' நுண்ணுயிர் துடிப்புடன் செயல்படத் தொடங்கு கிறது என்று அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் மதிப்பிட்டுள்ளது.
துடிப்புள்ள 'டிபி' காசநோய் என்று அழைக்கப்படுவதில் நுண்ணுயிரைக் கொல்லவோ அல்லது கட்டுப்படுத்தவோ உடல் தோல்வி அடையும்போது அது பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சலை ஏற்படுத்து கிறது. துடிப்புள்ள 'டிபி' இருக்கும் ஒருவருக்கு எல்லாவித அறிகுறிகளும் இருக்கும், அவரால் மற்ற வருக்கும் காசநோய் பரவும் சாத்தியமும் உள்ளது.
துடிப்புள்ள 'டிபி'யில் நோய்க்கான அறிகுறிகள்: மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்து நீடிக்கும் இருமல் அறிகுறிகளில் ஒன்றாகும்.
இருமலுடன் சளி அல்லது ரத்தம் வரலாம். குறைந்த அளவு காய்ச்சல், இரவில் வியர்ப்பது, சோர்வு, உடல் எடை குறைதல், மார்பு வலி உள்ளிட்டவை மற்ற சில அறிகுறிகள்.
'டிபி' நுரையீரலை மட்டும் பாதிக்குமா?: ஆரம்பத்தில் நுரையீல்களை பாதிக்கும். இது நுரையீரல் தொடர்பான காசநோய் என்று கூறப்படுகிறது. பின்னர் மத்திய நரம்பு மண்டலம், எலும்பு, மூட்டுகள் மற்றும் அடிவயிற்றைப் பாதிக்கலாம். இந்த நிலை கூடுதலான நுரையீரல் 'டிபி' என்று சொல்லப்படுகிறது.
'டிபி' சோதனை முறை: காசநோயால் பாதிக்கப்பட்டவருடன் குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள், வேலையிடங்களில் நெருக்கமாக உள்ள சக ஊழியர்கள் உள்ளிட்டோர் 'டிபி' சோதனைக்கு உட் படுத்தப்படுகின்றனர். பெரும் பாலான சமயங்களில் மார்பு எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் காசநோய் நிலைமை: சிங்கப்பூரில் காசநோய் பொதுவான நோய் அல்ல என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
2021ல் சிங்கப்பூரில் 1,306 பேருக்கு காசநோய் இருந்தது. இந்த எண்ணிக்கை 2020ல் 1,360ஆக இருந்தது.
டிபி'யின் தீவிர நிலை: காசநோய்க்கு சிகிச்சை அளிக்க தவறினால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
உலகம் முழுவதும் 1.5 மில்லியன் பேர் காசநோயால் மடிவதாக மதிப்பீடு தெரிவிக்கிறது. அதே சமயத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டால் காசநோயை குணப்படுத்திவிடலாம்.

