கொவிட்-19 கிருமிப்பரவலின்போது உறைவிடம் தேடியோர் எண்ணிக்கை சிங்கப்பூரில் வெகுவாக அதிகரித்தது.
ஜோகூர் பாரு, பாத்தாம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் எல்லைகள் மூடப்பட்டதும் செய்வது அறியாது திகைத்தனர். அதுவரை அடுக்குமாடி வீட்டு கீழ்த்தளங்களிலும் பொது இடங்களிலும் உறங்கிய பலரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தபோது திக்குமுக்காடிப் போயினர். இத்தகைய சூழலில் கத்தோலிக்க நலச் சேவை அமைப்பு தற்காலிகத் தங்குமிடமாக தனது இடத்தை மாற்றியமைத்து உதவிக்கரம் நீட்டியது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அந்த ஆண்டு ஏப்ரலில் உதவிக்கு அழைப்பு விடுத்தபோது சிங்கப்பூரின் மேலும் சில தேவாலயங்களும் பள்ளிவாசல்களும் இத்தகைய சேவையில் இணைந்துகொண்டன.
கிருமிப்பரவல் மக்களிடையே மனஅழுத்தம், துயரம், வலி போன்றவற்றுக்கு வித்திட்டாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது என்று இத்தகைய தொண்டூழிய அமைப்புகள் கூறுகின்றன. சமூகக் கட்டமைப்புகள் ஒருங்கிணைந்து துயரத்தில் இருந்தோரின் நிலைமை மேம்பட உதவுவதற்கான வாய்ப்பை அது தந்தது என்பதை இவை நினைவுகூர்கின்றன.
உறங்க இடமின்றித் தவிப்போருக்கு உதவும் சமூகக் கட்டமைப்பான 'பீயர்ஸ்' அமைப்பு இதன் தொடர்பில் ஆற்றிய பங்களிப்பிற்காக நேற்று நட்சத்திரப் பங்காளித்துவ விருதைப் பெற்றுக்கொண்டது. கொவிட்-19 பொதுச் சேவை உருமாற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது.
'பீயர்ஸ்' அமைப்பை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு 2019ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கியது.

