ஈராண்டுகளுக்கும் மேலாக இடம்பெறாமல் இருந்துவந்த சிங்கப்பூர்- டெசாரு படகுச் சேவை நேற்று மீண்டும் சரளமாகத் தொடங்கியது.
இருவழி பயணத்திற்குக் கட்டணம் $118. ஒருவழி பயணத்திற்கு $70 செலுத்த வேண்டும். 'பாத்தாம் ஃபாஸ்ட்' என்ற நிறுவனம் அந்தப் படகுச் சேவையை நடத்துகிறது.
ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதிவரை இணையத்தளம், சமூக ஊடகங்கள் வழி முன்பதிவு செய்வோருக்கு இருவழிக் கட்டணமாக $98 வசூ லிக்கப்படும்.
படகில் 330 பேர் செல்லலாம். வியாழன் முதல் ஞாயிறுவரை சிங்கப்பூரை விட்டு படகு காலை 8.30 மணிக்குப் புறப்படும். டெசாருவை விட்டு மாலை 5.30க்குக் கிளம்பும். ஒரு பயணத்திற்கு ஏறக்குறைய 90 நிமிடங்கள் ஆகும்.
தொற்றுக்கு முன், பயணிகள் சாங்கி படகு முனையத்தில் இருந்து புறப்பட்டு படகில் 30 நிமிடம் பயணம் செய்து ஜோகூரில் உள்ள கோத்தா திங்கியில் இருக்கும் தஞ்சோங் பெலாங்கோர் படகு முனையத்தைச் சென்று அடைவர்.
அங்கிருந்து வாகனத்தில் 30 முதல் 45 நிமிடங்களில் டெசாரு சென்றனர்.
கொரோனா காரணமாக அந்தப் படகுச் சேவை 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் நிறுத்தப்பட்டது.
பயணிகள் பேருந்து மூலமாகவும் டெசாரு செல்லலாம். இந்தப் பயணத்திற்குப் போக்குவரத்து, சுங்கச்சாவடி நிலவரங்களைப் பொறுத்து 2.5 மணி நேரம் ஆகும்.
இதனிடையே, படகுச்சேவைக்கு நல்ல ஆதரவு இருப்பதாக பாத்தாம் ஃபாஸ்ட் நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
கடவுச்சீட்டு, நுழைவு அனுமதி (விசா), அனுமதிச் சீட்டுகள், தடுப்பூசி சான்றிதழ் போன்ற செல்லுபடியாகக்கூடிய ஆவணங்களுடன் பயணிகள் செல்ல வேண்டும்.

