வாள் ஏந்தி ஒருவரைத் துரத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் மீது இன்னொரு குற்றச்சாட்டும் பதிவாகி உள்ளது.
27 வயது கென்னத் டான் ஹொங் சாங், போலி சமுராய் வாள் ஏந்தி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி அதிகாலை 6 மணி அளவில் பூன் லே வே அருகில் உள்ள சூன் லீ ஸ்திரீட்டில் இருக்கும் வீட்டில் இந்தக் குற்றத்தை அவர் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
இன்னோர் ஆடவரான 25 வயது ஃபூ யிமிங், இருவரைப் பார்த்து கத்தியதாகவும் அவர்களை மண்டிபோட்டு மன்னிப்பு கேட்கச் சொன்னதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை. ஃபூ தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் அதிகாலை 2.15 மணி அளவில் ஹவ்காங் ஸ்திரீட் 61ல் 'கட்டானா' எனப்படும் ஜப்பானியப் பாரம்பரிய வாள் ஒன்றை டான் தம்முடன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆடவர் ஒருவர் வாள் ஏந்திக்கொண்டு இன்னொருவரைத் துரத்தியதாகத் தகவல் கிடைத்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து விசாரணை நடத்தியும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் உதவியுடனும் அங் மோ கியோ காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
துரத்தப்பட்டதாகக் கூறப்படும் நபரைப் பற்றி காவல்துறையினர் தகவல் வெளியிடவில்லை. அந்த ஜப்பானியப் பாரம்பரிய வாளைக் காவல்துறையினர் கார் ஒன்றில் கண்டெடுத்து அதைப் பறிமுதல் செய்தனர்.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த வழக்கு இம்மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டு கள் வரையிலான சிறைத் தண்டனையும் குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

