பெருங்கடல் உயிரினங்கள் வாழ்விட சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிங்கப்பூர் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.
கடலில் பவளப்பாறை வளர்ச்சிக்கு சூரிய மின் சக்தியைப் பயன்படுத்த முடியுமா என்பதைக் கண்டறிய நடத்தப்படும் ஓர் ஆய்வும் அந்த முயற்சிகளில் இடம்பெறும்,
சிங்கப்பூர் கடல்பகுதிகளில் மிகக் குறைந்த சக்தியுடன் மின்சாரத்தைப் பயன்படுத்தி பவளப்பாறை வளர்ச்சிக்கு உதவுவது சாத்தியமா என்பதை ஆராய்வது அந்த ஆய்வுத் திட்டத்தின் நோக்கம் என்று தேசிய பூங்காக் கழகத்தின் தேசிய உயிரியல் பன்மைய நிலையத்தின் ஓர் இயக்குநரான டாக்டர் கரீன் டுன் தெரிவித்தார்.
கடலில் செழித்து வளர்ந்து பெருகும் பவளப்பாறைகள், கடல் வாழ்விட சுற்றுச்சூழல் நடைமுறைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவுவதாக அவர் கூறினார்.
நடத்தப்படும் ஆய்வு மூலம் தெரிய வருபவை, ஒரே மாதிரியான கடல் பகுதிகளில் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு உதவும் என்று டாக்டர் டுன் குறிப்பிட்டார்.
பெருங்கடல் வாழ்விட சுற்றுச்சூழலை மேம்படுத்த சிங்கப்பூர் ஒன்பது புதிய செயல்திட்டங்களை மேற்கொள்கிறது. அவற்றில் அந்த ஆய்வு ஒன்று.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சென்ற மாதம் போர்ச்சுக்கலில் நடந்த ஐநா பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசியபோது அந்த ஒன்பது செயல்திட்டங்கள் பற்றி அறிவித்தார்.
கரிமக் கழிவுகளை அதிகம் வெளியிடும் கடல்துறைகளின் கரிம அளவைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பயிற்சிப் படிப்பு ஆகியவையும் அச்செயல்திட்டங்களில் அடங்கும்.
சிங்கப்பூர் சிறு தீவு. கடல் சார்ந்த நகர நாடு. சிங்கப்பூரின் வரலாறு, மக்கள், பொருளியல் ஆகியவற்றைப் பெருங்கடலை விட்டுவிட்டு பிரித்துப் பார்க்க இயலாது என்று அமைச்சர் தான் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் உயிர்ப்பித்து இருப்பதும் அதன் செழிப்பும் பெருங்கடலைச் சார்ந்துள்ளது.
உணவு, வேலை வாழ்வாதாரத்தை பெருங்கடல் வழங்குகிறது. உலக வர்த்தகத்திற்கு உறுதுணையாக உள்ளது. பருவநிலை, தண்ணீர் ஓட்டம் ஆகியவற்றில் மிகமுக்கிய பங்காற்றும் பெருங்கடல், உயிரியல் பன்மயத்தின் வளமாகவும் திகழ்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பெருங்கடலைக் கெடாமல் பாதுகாப்பதும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் அதைப் பயன்படுத்துவதும் அனைத்துலக சட்டத்தின்கீழ் இடம்பெற வேண்டும்.
தகவல்களையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டு அத்தகைய முயற்சிகள் இடம்பெற வேண்டும். பெருங்கடல் வாழ்விடச் சூழலைப் பாதுகாக்க பலதரப்பு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
சிறிய நாடான சிங்கப்பூர் தன் பங்கை ஆற்றி வருகிறது என்று குறிப்பிட்ட டாக்டர் பாலகிருஷ்ணன், ஐநாவுக்கான சிங்கப்பூரின் புதிய தன்னார்வ கடப்பாடுகளையும் அறிவித்தார்.