உலகின் ஆகச் சிறந்த கப்பல் போக்குவரத்து நடுவம் என்ற சிறப்பை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது.
'சின்ஹுவா-பால்டிக்' அனைத்துலக கப்பல் போக்குவரத்து மேம்பாட்டுக் குறியீட்டின் அடிப்படையில் சிங்கப்பூர் இந்தத் தரநிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
உலகின் 43 கடல்துறை நிலையங்களின் செயல்திறனை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது. சரக்கு நிர்வாகம், துறைமுக வசதிகள், கடல்துறைச் சேவைகள், வர்த்தகச் சூழல் போன்ற அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
வலுவான துறைமுக உள்கட்டமைப்பு, விரிவான கடல்துறைச் சேவைகள், ஆதரவான அரசாங்கக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிங்கப்பூர் இந்தச் சிறப்புத் தகுதியைப் பெறுவதாக 'சின்ஹுவா-பால்டிக்' குறியீடு தொடர்பான அறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூர் 100க்கு 94.88 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பெற்ற வேளையில், லண்டன் 83.04 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றது. உலகின் ஆகப் பெரிய துறைமுகத்தைக் கொண்டிருக்கும் ஷங்காய் 82.79 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. சிங்கப்பூர் இவ்வாறு தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு, கடல்துறையில் முத்தரப்புப் பங்காளிகள் இடையிலான வலுவான ஒத்துழைப்பே காரணம் என்று நிதி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.

