சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்துள்ள நீ ஆன் கோங்சி சமுதாய தாக்கத்துக்கான நடுவம், முதியோருக்கு உதவும் புதிய தொழில்நுட்பத்தை வடிமைக்க மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும்.
மாணவர்கள் இத்தகைய திட்டங்களை மேற்கொள்ளவும், சமூக நிறுவனங்களை நடத்தவும் இந்த நடுவம் உதவும்.
புதிய நடுவம் நேற்று தொடங்கப்பட்டது. லாப நோக்கமற்ற அமைப்பான நீ ஆன் கோங்சி இதற்கு பத்து மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்க உறுதியளித்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு மில்லியன் வெள்ளி என்ற கணக்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.
சிங்கப்பூரில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மூத்த குடிமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குப் புத்தாக்கமான முறையில் தீர்வுகாண மாணவர்களை இந்தப் புதிய நடுவம் ஊக்குவிக்கிறது.
எடுத்துக்காட்டாக, தனியாக இருக்க நேரிடும் மூத்தோருக்குத் துணையாக இயந்திர மனிதக் கருவிகளை உருவாக்குவது குறித்து இந்த நடுவம் ஆய்வுசெய்யும். ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 'லோவோட்' (படம்) எனும் இத்தகைய இயந்திர மனிதக் கருவிகள் ஆரஞ்ச் வேலி தாதிமை இல்லத்தில் சோதிக்கப்படுகின்றன. மேலும் பல 'லோவோட்' கருவிகளை வாங்க நடுவம் நிதியளிக்கும்.
முதியோர் குளிப்பதற்கு உதவும் சாதனங்களையும் இது வடிவமைக்க முயலும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நீண்டகால அடிப்படையில், சமூக நிறுவனக் கட்டமைப்புக்கும் முதியோர் சார்ந்த பொருளியலுக்கும் பங்களிக்கக்கூடிய கூடுதலான தொழில்முனைவர்களை உருவாக்க இந்த நடுவம் கைகொடுக்கும் என்றார் அவர்.

