5 வயது சிறுவன்மீது வெந்நீரை ஊற்றி மரணம் விளைவித்த கொடுமை
ஐந்து வயது சிறுவன்மீது வெந்நீரை ஊற்றி துன்புறுத்திய தம்பதிக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் கடுமையாக்கியுள்ளது.
அஸ்லின் அருஜுனா, 30, எனும் அச்சிறுவனின் தாயார் தற்போது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை எதிர்நோக்குகிறார். இவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபணமானதை மேல்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்துள்ளதைத் தொடர்ந்து தீர்ப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அச்சிறுவனுக்குக் கடுமையான காயம் விளைவித்ததாக அஸ்லினுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி இருந்தன.
ரிட்சுவான் மெகா அப்துல் ரஹ்மான், 30, எனும் இவருடைய கணவருக்கு இப்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இத்தம்பதிக்கு தலா 27 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
கூடுதல் மனு சமர்ப்பிப்புக்காக இவர்களுடைய வழக்கு பிந்தைய ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அஸ்லினுக்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும். முன்னதாக, ரிட்சுவானுக்கு 24 பிரம்படிகள் விதிக்கப்படும் என்று அளிக்கப்பட்டு இருந்த தீர்ப்பு நிலைநாட்டப்படுமா என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும்.
2016 அக்டோபர் 15க்கும் 22ஆம் தேதிக்கும் இடையே தோ பாயோவில் உள்ள தங்களது ஓரறை வீட்டில் நான்கு தருணங்களில் இத்தம்பதி இவர்களுடைய மகன்மீது வெந்நீரை ஊற்றி துன்புறுத்தினர்.
கடைசி சம்பவத்தின்போது அச்சிறுவன் மயங்கி விழுந்தான். அதிலிருந்து ஏழு மணி நேரம் கழித்த பிறகே இவர்கள் அச்சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அச்சிறுவனின் உடல் படுமோசமாக வெந்துபோனதைத் தொடர்ந்து, 2016 அக்டோபர் 23ஆம் தேதி அவன் உயிரிழந்தான்.
அச்சிறுவனை இத்தம்பதி மற்ற விதங்களிலும் துன்புறுத்தினர். செல்லப்பிராணி கூண்டில் அவனை அடைத்து வைத்தது, குறடைக் கொண்டு அவனது உடலைக் கிள்ளியது, துடைப்பத்தைக் கொண்டு அவனை அடித்தது, அனலில் வைக்கப்பட்ட கரண்டியைக் கொண்டு அவனுடைய உள்ளங்கையில் சூடு வைத்தது உள்ளிட்ட துன்புறுத்தல் செயல்களை இவர்கள் புரிந்தனர்.
இத்தம்பதிக்கு மற்ற பிள்ளைகளும் உள்ளனர். நீதிமன்ற உத்தரவு காரணமாக அச்சிறுவன் மற்றும் அவனுடைய உடன்பிறப்புகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, இத்தம்பதியைக் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி விடுவித்தார். மாறாக, அச்சிறுவனுக்குக் கடுமையான காயம் விளைவித்ததாக இவர்கள்மீது குற்றம் நிரூபணமாகி இருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். அஸ்லினுக்கு எதிராக கொலைக் குற்றத்தை நிரூபிக்கவும் இத்தம்பதிக்கு ஆயுள் தண்டனையை விதிக்கவும் அவர்கள் கோரியிருந்தனர்.

