செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
e0343d16-20d8-41a5-bc5c-6cdbf2219417
-

மாணவிகளை ஆபாசமாக காணொளி எடுத்தவருக்கு 20 வாரம் சிறை

சிங்கப்பூர் ஆயுதப் படையின் போர்க்கால படைவீரரான போ யூ ஜியென், 30 (படம்), பொது இடங்களில் பள்ளி மாணவிகளைப் பின்தொடர்ந்து அவர்களுடைய பாவாடைக்குள் குறைந்தது 28 காணொளிகளை எடுத்தார். 2020 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இவர் இக்குற்றச் செயல்களைப் புரிந்தார்.

இதற்காக இவருக்கு நேற்று 20 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு அருகே மேம்பாலங்கள் உள்ள படிக்கட்டுகளில் குறைந்தது 13 மாணவிகளின் பாவாடைக்குள் இவர் காணொளி எடுத்தார்.

எம்ஆர்டி நிலையம் ஒன்றில் மின்படிக்கட்டில் தம்மைப் படமெடுப்பதைக் கண்ட 15 வயது மாணவி ஒருவரால் இவர் பிடிபட்டார். இதுகுறித்து அந்த மாணவி தம் ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, 2020 அக்டோபர் 17ஆம் தேதி போ கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூர் ஆயுதப் படையில் ராணுவ மருத்துவ நிபுணர் பொறுப்பில் இருந்து போ பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிற்குப் பிறகு இவர் அனேகமாக பணிநீக்கம் செய்யப்படுவார்.

கிராப் ஓட்டுநரை 3 நிமிடங்களுக்குமேல் காக்க வைத்தால் $3 கூடுதல் கட்டணம்

கிராப் ஓட்டுநரை மூன்று நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வைக்கும் பயணிகள் கூடுதல் கட்டணமாக $3 செலுத்த வேண்டியிருக்கும். ஜூலை 18ஆம் தேதி இந்த நடைமுறை நடப்புக்கு வருகிறது.

தற்போது பயணிகளுக்கு வழங்கப்படும் கால அவகாசம் ஐந்து நிமிடங்களாக உள்ளது. ஆனால், இனி அது மூன்று நிமிடங்களாக குறைக்கப்படும்.

ஓட்டுநர் காக்க வைக்கப்படும் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் இந்தக் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். கிராப் சிங்கப்பூர் நிறுவனம் நேற்று முன்தினம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய இத்தகவலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கிராப் பயண முன்பதிவைப் பயணிகள் ரத்து செய்வதற்கான அவகாசமும் குறைக்கப்படுகிறது. முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அதைப் பயணிகள் ரத்து செய்வதற்கான அவகாசம் தற்போதைய ஐந்து நிமிடங்களில் இருந்து மூன்று நிமிடங்களாகக் குறைக்கப்பட உள்ளது. அந்த அவகாசத்திற்குப் பிறகு முன்பதிவை ரத்து செய்தால் $4 கட்டணம் விதிக்கப்படும். இந்த மாற்றமும் ஜூலை 18ஆம் தேதி நடப்புக்கு வருகிறது.

விடுதி அறையை வாடகைக்கு விடும் மாணவர்கள் மீது நடவடிக்கை: என்டியு

தங்கள் மாணவர் விடுதி அறையை வாடகைக்கு விடும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) மாணவர்கள், விடுதியிலிருந்து நீக்கப்படக்கூடும் என்பதோடு இதர ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்நோக்கக்கூடும். பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவது அல்லது நீக்கப்படுவது அத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகளில் அடங்கும். என்டியு அதன் மாணவர்களுக்கு நேற்று அனுப்பிய மின்னஞ்சலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதி அறைகள் வழங்கப்பட்ட மாணவர்களில் சிலர், பணம் ஈட்டும் நோக்கில் அவற்றை வாடகைக்கு விட முயற்சி செய்தது குறித்து தெரிய வந்திருப்பதாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விடுதியில் தங்குவதற்கு இடமில்லாத மாணவர்களுக்காக தங்கள் அறைகளை வாடகைக்கு விட டெலிகிராம் செயலியில் உள்ள உரையாடல் குழு ஒன்றில் அவர்கள் விளம்பரப்படுத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது.

தங்கள் அறையை வாடகைக்கு விட சில மாணவர்கள் மாதம் ஒன்றுக்கு $900 வரை வாடகை கேட்டதாக தெரியவந்துள்ளது. விடுதி அறையை வாடகைக்கு விடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று என்டியு அதன் மாணவர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது.