சிங்கப்பூரில் பயங்கரவாத மிரட்டல் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்றும் கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தில் நடப்பில் இருந்த அனைத்துலகப் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வேளையில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு கூறியுள்ளது.
சிங்கப்பூர் எதிர்நோக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள், பெரும்பாலும் தீவிரவாதச் சித்தாந்தத்திற்குச் சுயமாக ஈர்க்கப்படும் தனிநபர்களிடமிருந்து எழுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரில் 45 பேருக்கு உள்நாட்டு பாதுகாப்புச் சட்ட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அவர்களில் 33 பேர் சிங்கப்பூரர்கள், 12 பேர் வெளிநாட்டினர்.
மேலும் பயங்கரவாதத்துக்கு நிதி ஆதரவு வழங்கிய குற்றத்திற்காக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள், 10 பேர் வெளிநாட்டினர்.
தீவிரவாதப் போக்கைப் பின்பற்றுவோர் கிருமித்தொற்றுக் காலத்தின்போது உருவாக்கிய திட்டங்களைத் தற்போது நடைமுறைப்படுத்தக்கூடும் என்று அது தெரிவித்தது.
எனினும், தற்போது சிங்கப்பூர் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான எந்த குறிப்பிட்ட வேவுத் தகவலும் இல்லை என்று உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு கூறியது. ஆனால் அத்தகைய மிரட்டல் குறித்துத் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

