மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் இஸ்லாமிய பயங்கரவாதத்தைவிட வலதுசாரி தீவிரவாதம் விடுக்கும் மிரட்டலே அதிகம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ஐஎஸ்டி) குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் மெல்ல உருவெடுத்துவரும் அபாயமாக உள்ள இக்குறிப்பிட்ட வகை தீவிரவாதம், அனைத்துலக அளவில் ஏற்படும் மோதல்களால் மேலும் தூண்டப்படலாம் என்றது ஐஎஸ்டி.
அமெரிக்காவில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் இவ்வாண்டு மே மாதத்திலும் இரு வேறு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நியூசிலாந்தில் மார்ச் 15 2019ல் இரண்டு பள்ளிவாசல்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி 51 பேரைக் கொன்ற வெள்ளை இனவாதி பிரெண்டன் டாரண்ட் என்பவனின் செயலால் இவ்விரு நபர்களும் அதேபோன்று செயல்படத் தூண்டப்பட்டதாக ஐஎஸ்டி நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
தாக்குதலின் ஒரு பகுதியை ஃபேஸ்புக்வழி நேரடியாக டாரண்ட் ஒளிபரப்பியதாகவும் ஐஎஸ்டி சுட்டியது.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களைத் தாக்கி, தொழுகையில் ஈடுபட்டுஇருப்பவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிய 16 வயது மாணவர் ஒருவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் வலதுசாரி தீவிரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட முதல் நபர் அவர் என்றும் ஐஎஸ்டி தடுத்து வைத்துள்ள ஆக இளம் வயதுடையவர் என்றும் அறியப்படுகிறது.
அந்த மாணவர், டாரண்ட் தாக்குதல் நடத்திய நேரலைக் காணொளியைப் பார்த்ததுடன் அவனின் கொள்கை அறிக்கையைப் படித்தும் இருந்திருக்கிறார்.
"வலதுசாரி தீவிரவாதத்தின் அம்சங்கள், விளையாட்டு முறை தழுவியதாக உள்ளன. இணையவழி குறிவைத்துச் சுடும் விளையாட்டுகள் மூலம் ஆள்சேர்க்கப்படுகின்றனர். இப்படியே வலதுசாரி தீவிரவாதக் கதைகள் நாடுவிட்டு நாடு சென்று இளையரிடையே மெல்ல பிரபலமடைந்துவிட்டன," என்று தனது நான்காவது சிங்கப்பூர் பயங்கரவாத மிரட்டல் மதிப்பீட்டு அறிக்கையில் ஐஎஸ்டி விளக்கியுள்ளது.
இதுபோன்ற தீவிரவாதச் சிந்தனையை ஆதரிப்போருக்கு ரஷ்ய-உக்ரேன் போர்கூட ஓர் ஈர்ப்பு மையமாக இருக்கலாம் என்றது ஐஎஸ்டி. தன் அனைத்துலகப் படையணியில் சேருமாறு உக்ரேன் அழைப்பு விடுத்தபோது வலதுசாரி தீவிரவாதச் சிந்தனை உட்பட சுமார் 20,000 தொண்டூழியர்கள் முன்வந்ததாகக் குறிப்பிடப்பட்டது. மேற்கத்திய நாடுகள் பல, உக்ரேன் தற்காப்புக்காக கணிசமான எண்ணிக்கையில் ஆயுதங்களையும் வழங்கியுள்ளன.
இந்நிலையில், வெளிநாடுகளில் நடப்பவை சிங்கப்பூரின் பாதுகாப்புச் சூழல் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றது ஐஎஸ்டி.

