வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள நோயாளிகள் புதிய அந்திமகாலப் பராமரிப்பு இல்லத்தில் தங்களுக்கு விருப்பமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம், அங்குள்ள சேவைகளையும் நாடலாம்.
வழக்கமாக முன்னரே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில்தான் அவர்கள் ஈடுபட முடிந்தது. ஆனால், ஊட்ரம் சமூக மருத்துவமனையில் 900 சதுர மீட்டர் அளவில் அமைந்துள்ள ஒவேசிஸ்@ஊட்ரம் என்ற அந்திமகாலப் பராமரிப்பு நிலையத்தில் அவர்களே தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வுசெய்யலாம்.
மற்ற இடங்களில் இல்லாத வகையில் உணவுக்கூடமும் பானக்கூடமும் இங்கு உள்ளன.
அந்திமகாலப் பராமரிப்புச் சேவைகளுக்கான தேவை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துவருவதாக நேற்று ஒவேசிஸ்@ஊட்ரம் சென்றிருந்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார். தங்கள் இறுதி நாள்களிலும் வாழ்க்கைத்தரம் மாறாது மக்கள் வாழவேண்டும் என்பதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக திரு ஓங் கூறினார். நிலையம் வாரத்தில் ஐந்து நாள்களுக்கு இயங்கும்.

