யுகேஷ் கண்ணன்
சிறு வயதில் பல ராணுவ நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவந்த சாய் சித்தார்த், 25, ராணுவ வீரர்களின் மிடுக்கையும் துடிப்பையும் கண்டு, முழுநேரமாக ராணுவத்தில் இணைய வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தார்.
தேசிய சேவைக்காக 2016ல் ராணுவத்தில் இணைந்த சித்தார்த், அடிப்படை ராணுவப் பயிற்சிக்குப் பின்பு தலைமை அதிகாரிப் பயிற்சிக்குத் தேர்ச்சி பெற்றார்.
தேசிய சேவைக்கு முன்னர் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வேதிப் பொறியியல் துறையில் பட்டயப் படிப்பை முடித்திருந்த அவர், தலைமை அதிகாரிப் பயிற்சிக்குப்பின் ராணுவப் பொறியாளர் பிரிவில் பணியமர்த்தப்பட்டார்.
ராணுவம், பொறியியல் ஆகிய இருதுறைகளிலும் தனக்குள்ள ஈடுபாட்டையும் திறன்களையும் செயல்படுத்தும் வகையில் அப்பணி அமைந்ததால், அதை முழுநேரமாக மேற்கொள்ள சித்தார்த் முடிவெடுத்தார். எனவே, தேசிய சேவைக்குப் பின்னர், நன்யாங் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் இளநிலைப் பட்டக் கல்வியைத் தொடர அவருக்கு ராணுவத்தின் உபகாரச் சம்பளம் கிடைத்தது.
"இப்பணியில் என்னால் ஒரு தலைவராகவும் ஒரு பொறியாளராகவும் ஒரே நேரத்தில் செயல்பட முடிவது எனக்கு நிறைவளிக்கிறது," என்று சித்தார்த் கூறினார்.
மூத்த ராணுவ வல்லுநர்களாக நேற்று நியமனம் பெற்ற 93 அதிகாரிகளில் 4ஆம் நிலை ராணுவ வல்லுநராகப் பயிற்சி பெற்ற சாய் சித்தார்த்தும் ஒருவர்.
பராமரிப்பு, பொறியியல் பிரிவில் சேவையாற்றவுள்ள இவர், பல்கலைக்கழகத்தில் கற்ற திறன்களும் நுணுக்கங்களும் தனது பணியில் சிறந்து விளங்க உதவியாக இருக்குமென நம்புகிறார்.
ராணுவ வாகனங்களும் ஆயுதங்களும் சீரான நிலையில் இருப்பதை உறுதிசெய்து, போர்க்காலப் பயிற்சிகள் சிறப்பாக நடந்தேற உதவுவதன் வழி நாட்டின் பாதுகாப்பில் பங்காற்றுவது மகிழ்ச்சிஅளிப்பதாக சித்தார்த் கூறினார்.
தற்காப்பு அமைச்சு, மனிதவள அமைச்சின் மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது, நேற்று தெமாசெக் கழகக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புதிதாக நியமனம் பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
"மாறிவரும் பாதுகாப்புச் சூழலில் ஏற்படும் இணைய, மின்னிலக்கச் சம்பவங்களைச் சமாளிப்பதற்கு தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் தொடர்ந்து மேம்பட்டு வருவது அவசியம். உயர்தர பயிற்சிகளின் வழி இதுபோன்ற ராணுவ வல்லுநர்களை உருவாக்குவது, நாட்டின் பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும்," என்றார் அவர். எதிர்காலத்திற்கு ஏற்ற, நிலையான சிங்கப்பூர் ஆயுதப்படையை உருவாக்குவது இத்தகைய வீரர்களின் கையில் உள்ளதென அமைச்சர் கூறினார்.

