ஜி-20 சந்திப்புகளுக்காக
பாலியில் துணைப் பிரதமர் வோங்
ஜி-20 கூட்டமைப்பு நாடுகள் பங்கேற்கும் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பாலி சென்றுள்ளார். நிதி அமைச்சராகவும் உள்ள திரு வோங், அங்கு நடைபெறவுள்ள மூன்றாம் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்திலும் அது தொடர்பான நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது. அனைத்துலகப் பொருளியல் நிலை, கொள்ளைநோய் தொடர்பான தயார்நிலை, தற்காப்பு, செயல்பாடு மற்றும் நீடித்த நிலைத்தன்மையுடைய நிதியும் உள்கட்டமைப்பும் குறித்து 'ஜி-20' நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் கலந்து பேசுவர் என்று கூறப்பட்டது.
தொழில்நுட்பக் கல்விக் கழகம்
வழங்கும் 30 இலவசப் பயிலரங்குகள்
நிழற்படக் கலை, சமையல் கலை, கைபேசிச் செயலி உருவாக்கம், ஆளில்லா வானூர்தியை இயக்குதல், சமூக ஊடகத் தளங்களின் பயன்பாடு போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐடிஇ) வழங்கவுள்ள இலவசப் பயிலரங்குகளுக்கு இனி பதிந்துகொள்ளலாம். கழகத்தின் 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நோக்கில் அக்டோபர் இறுதிவரை மக்கள் இந்தப் பயிலரங்குகளில் பங்கேற்கலாம் என்று ஐடிஇ தலைமை நிர்வாகி லோ காஹ் கெக் தெரிவித்துள்ளார்.
கழகத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் இத்தனை ஆண்டுகளாக ஆதரவு வழங்கிவரும் சமூகத்திற்கு நன்றி தெரிவிக்கவே இந்தத் திட்டம் என்றார் அவர்.
பீப்பிள்ஸ் பார்க் சென்டரில் நிம்மதிப்
பெருமூச்சு, அதிருப்திக் குரல்
பீப்பிள்ஸ் பார்க் சென்டர் கட்டடம் ஒட்டுமொத்த விற்பனைக்கு வந்திருப்பதாகச் செய்தி அறிந்த அங்குள்ள கடைக்காரர்கள் சிலர், தங்களின் ஓய்வுக்காலம் நெருங்கிவிட்டதை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். சைனாடவுன் வட்டாரத்தில் உள்ள இந்தக் கட்டடம், ஒட்டுமொத்த விற்பனைக்குப் பொது ஏலம் வழியாக $1.8 பில்லியனுக்கு வந்துள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. கடைக்காரர்கள் மகிழ்ந்தாலும் கட்டடத்தில் அமைந்துள்ள வீடுகளில் குடியிருப்போர், அதிருப்தியில் உள்ளனர். 1970ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம், தண்ணீர்க் கசிவு போன்ற பிரச்சினைகளுடன் பொலிவிழந்த நிலையில் உள்ளதென அவர்கள் கூறுகின்றனர்.

