மூத்த ஊழியர்களுக்கு வாழ்க்கைத்தொழில் தொடர்பான திட்டமிடலைச் சிக்கலின்றிச் செய்வதற்கு இனி முதலாளிகள் புதிய வழிகாட்டிப் புத்தகம் ஒன்றை நாடலாம். 'கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைத்தொழில் திட்டமிடல் வழிகாட்டிப் புத்தகம்' (The Structured Career Planning guidebook) நேற்று வெளியிடப்பட்டது.
வாழ்க்கைத்தொழில், திறன் மேம்பாட்டு ஆகியவற்றில் ஊழியர்களை ஈடுபடுத்தும் செயல்முறையை நடப்புக்குக் கொண்டுவரும் ஒரு கட்டமைப்பை இந்த வழிகாட்டிப் புத்தகம்வழி முதலாளிகள் அறிந்துகொள்ளலாம்.
சிங்கப்பூரின் மூப்படையும் ஊழியரணிக்கு ஆதரவு அளிப்பதற்கு இந்தத் திட்டம் அவசியம் என்று புத்தக வெளியீட்டு நிகழ்வின்போது மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் தெரிவித்தார். தற்போது சிங்கப்பூர் ஊழியர்களில் 55 வயதுக்கு மேல் சுமார் 25 விழுக்காட்டினர் இருக்கும் நிலையில் மேலும் அதிக காலம் நீடிக்கக்கூடிய வாழ்க்கைத்தொழில்களுக்கு மூத்தோர் தயாராக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றார் அமைச்சர் கோ.
"ஒருவர் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவது உண்மை சவால் அல்ல. நம் ஊழியர்கள் தொடர்ந்து திறன் மேம்பாட்டில் ஈடுபட்டு வர்த்தக, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதிசெய்வதே உண்மை சவால்," என்றார் அவர்.
மனிதவள அமைச்சுடன் இணைந்து இந்த வழிகாட்டிப் புத்தகத்தை சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

