தெம்பனிசில் உள்ள சைக்கிளோட்டிகள், புதியதொரு திட்டத்தின்கீழ் மேலும் 8 கிலோமீட்டர் நீளமுடைய சைக்கிள் பாதைகளை எதிர்பார்க்கலாம். 2026க்குள் தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள சைக்கிள் பாதைகளின் நீளம் 30 கிலோமீட்டரை எட்டும்.
தெம்பனிஸ் சைக்கிள் பாதைகளின் விரிவாக்கத்திற்காக, நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று ஒப்பந்தப்புள்ளி ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது.
தெம்பனிஸ் அவென்யூ 2, 7 போன்ற இடங்களையும் தெம்பனிஸ் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையம், தெம்பனிஸ் மால் கடைத்தொகுதி போன்ற பகுதிகளையும் இந்த சைக்கிள் பாதைகள் இணைக்கும்.
பாசிர் ரிஸ் வட்டாரத்திற்கு இட்டுச்செல்லும் மேம்பால சைக்கிளோட்டப் பாதையும் சீமெய் வட்டாரத்திற்கு இட்டுச்செல்லும் சைக்கிள் சுரங்கப்பாதையும் இந்த ஒப்பந்தப்புள்ளியில் அடங்கும்.
தெம்பனிசில் இருந்து இந்த இரு வட்டாரங்களுக்கு சைக்கிளோட்டிகள் எளிதில் செல்ல இந்த சைக்கிளோட்டப் பாதைகள் வழிவகுக்கும்.
தற்போது இந்த வட்டாரங்களுக்குச் செல்ல, நடை மேம்பாலங்களில் அவர்கள் சைக்கிளில் இருந்து இறங்கி அதைத் தள்ளிச்செல்ல வேண்டி உள்ளது.
சிங்கப்பூரில் ஆக விரிவான, நீளமான சைக்கிள் பாதை கட்டமைப்புகளில் ஒன்றைக் கொண்டு இருக்கும் தெம்பனிசில் சைக்கிள் பாதை இணைப்பு வசதியை இத்திட்டம் மேம்படுத்துகிறது.
அங் மோ கியோவுக்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது நடமாட்ட, சைக்கிளோட்ட வட்டாரமாக 2017ல் தெம்பனிஸ் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தற்போது, தெம்பனிசில் 17 கிலோமீட்டர் நீளமுடைய சைக்கிள் பாதைகள் உள்ளன. அவற்றில் 4 கிலோமீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதைகள் இவ்வாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டன.
தெம்பனிஸ் அவென்யூ 1, அவென்யூ 4, அவென்யூ 5, அவென்யூ 8 ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பாளர்களை இந்தப் பாதைகள் இணைக்கின்றன.

