2019ல் தம்முடைய முன்னாள் காதலியின் ஒன்பது மாதக் குழந்தையைக் கொன்றதாக முகம்மது அலிஃப் முகம்மது யூசோஃப், 29, என்பவர் மீதான குற்றம் நேற்று நிரூபணமானது. இந்தக் குழந்தை தம் கையிலிருந்து நழுவி கீழே விழுந்ததாகக் கூறிய அலிஃபின் தற்காப்பு வாதத்தை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இஸ் ஃபயாஸ் ஸயானி அகமது (படம்) எனும் இக்குழந்தையை தம் கையில் தூக்கி வைத்திருந்த தாம், வேன் கதவை மூடியபோது குழந்தை நகர்ந்ததில் அதன் தலை வேனின் தரைப் பலகையில் அடித்து, தரையில் விழுந்ததாக அலிஃப் கூறினார்.
ஆனால், வேனின் தரைப்பலகையில் குழந்தையின் தலையை அழுத்தியதில், இதற்கு மரணம் விளைவிக்கப்பட்டதாக உயர் நீதிமன்ற நீதிபதி மேவிஸ் சியோன் தமது தீர்ப்பில் கூறினார்.
குழந்தை தவறி கீழே விழுந்ததாக அலிஃப் கூறியது, குழந்தையின் பிரேதப் பரிசோதனை முடிவு மற்றும் மருத்துவ நிபுணரின் கருத்துக்கு ஒத்திருக்கவில்லை என்பதை நீதிபதி சியோன் கண்டறிந்தார்.
தலையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு குழந்தை மரணம் அடைந்ததை தடயவியல் நிபுணர் கில்பர்ட் லாவ் கண்டறிந்தார்.
இந்தக் குழந்தை உண்மையிலேயே கீழே விழுந்து மரணம் ஏற்படும் அளவிற்குக் காயம் ஏற்பட்டிருந்தால், அதன் மண்டை ஓட்டில் சிதைவு அல்லது கீறல் ஏற்பட்டு இருக்கும். ஆனால், அப்படி எதுவும் கண்டறியப்படவில்லை என்று டாக்டர் லாவ் சாட்சியம் அளித்தார்.
காவல்துறையிடம் அலிஃப் அளித்த சாட்சியத்தில், குழந்தையின் தலையை வேனின் தரைப் பலகையில் அழுத்தியதை ஒப்புக்கொண்டாலும், தம் கையிலிருந்து நழுவி விழுந்ததில் அதன் தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறி இப்படியும் அப்படியுமாக ஊசலாடினார்.
அலிஃபின் வழக்கு ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை எதிர்நோக்குகிறார்.

