கூட்டுரிமை வீட்டு மறுவிற்பனை விலைகள் கடந்த ஜூன் மாதம் தொடர்ந்து 23வது மாதமாக ஏற்றம் கண்டன. அதே வேளையில், பருவ விடுமுறைக்கு மத்தியில் கைமாறிய வீடுகளின் எண்ணிக்கை குறைந்தது. கடந்த மாதம் கூட்டுரிமை வீட்டு மறுவிற்பனை விலைகள் 0.8 விழுக்காடு உயர்ந்தன. ஒப்புநோக்க, கடந்த மே மாதம் இந்த உயர்வு 0.3 விழுக்காடாக இருந்தது. சொத்துச் சந்தை நிறுவனங்களான எஸ்ஆர்எக்ஸ் மற்றும் 99.co நேற்று வெளியிட்ட முன்னோட்டத் தகவலில் இது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்புநோக்க, வீட்டு விலைகள் 9.4 விழுக்காடு உயர்ந்தன.
இதற்கிடையே, கைமாறிய கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 17.2 விழுக்காடு சரிந்தது. கடந்த மாதம் ஏறக்குறைய 1,250 வீடுகள் கைமாறின. ஒப்புநோக்க, கடந்த மே மாதம் இந்த எண்ணிக்கை 1,510ஆக இருந்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்புநோக்க, வீட்டு மறுவிற்பனை பரிவர்த்தனை விகிதம் 17.1 விழுக்காடு குறைந்தது.
என்றாலும், ஜூன் மாதத்துக்கான ஐந்தாண்டுச் சராசரியைவிட கடந்த மாதம் பரிவர்த்தனை 27.3 விழுக்காடு அதிகமாக இருந்தது.
பரிவர்த்தனை விகித சரிவுக்கு ஜூன் பள்ளி விடுமுறையையும் மறுவிற்பனைக்கு விடப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததையும் சொத்துச் சந்தை நிபுணர்கள் சுட்டினர்.
கூட்டுரிமை வீட்டு மறுவிற்பனை குறைந்ததற்கு உலகளாவிய நிச்சயமற்ற பொருளியல் சூழலும் வட்டி விகித அதிகரிப்பும் காரணங்களாக இருக்கலாம் என்று ஆரஞ்சுடீ & டை நிறுவனத்தைச் சேர்ந்த கிறிஸ்டின் சுன் கூறினார்.

