உயரத்திலிருந்து விழுவது வேலையிட மரணங்களுக்கு முக்கிய காரணம் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தாண்டு நடந்த 29 மரணங்களில், 11 பேர் உயரத்திலிருந்து கீழே விழுந்து மடிந்தனர். இதில் இருவர் கப்பலில் வேலை பார்க்கும்போது, கடலில் விழுந்தனர்; ஒருவர் வாகனத்திலிருந்து இறங்கும்போது கீழே விழுந்தார்; இருவர் உயரத்திலிருந்து வேலை பார்க்கும்போது, தடுக்கி விழுந்தனர்.
இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலையிட பாதுகாப்பு மன்றத்தில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
2016ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 42 பேர் வேலையிட விபத்துகளில் உயிரிழந்தனர். இதன்பிறகு, ஆக அதிக பேர் வேலையிடத்தில் மாண்டிருப்பது இந்த ஆண்டில்தான்.
வாகன விபத்து, பழுதடைந்த சாதனம், கட்டமைப்பு கோளாறு ஆகியவற்றாலும் வேலையிட மரணங்கள் நடக்கின்றன.
ஆக அண்மையாக சுவா சூ காங் வட்டாரத்தில் கட்டுமானத் தளத்தில் ஒரு பளுதூக்கி கவிழ்ந்ததில் இந்திய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சென்ற வாரம் உயிரிழந்தார்.

